Published:Updated:

சாதிய பாகுபாடு: பள்ளிச் சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுத்த கொடூரம் - பிரச்னைக்குக் காரணம் என்ன?!

சாதிய கொடுமை நடந்த கிராமம்

பணம் கொடுத்து மிட்டாய் வாங்கச் சென்ற பட்டியலின பள்ளிச் சிறுவர்களை அவமதித்துத் திருப்பி அனுப்பிய கடையின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். இந்த சாதிய கொடுமை தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

சாதிய பாகுபாடு: பள்ளிச் சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுத்த கொடூரம் - பிரச்னைக்குக் காரணம் என்ன?!

பணம் கொடுத்து மிட்டாய் வாங்கச் சென்ற பட்டியலின பள்ளிச் சிறுவர்களை அவமதித்துத் திருப்பி அனுப்பிய கடையின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். இந்த சாதிய கொடுமை தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

Published:Updated:
சாதிய கொடுமை நடந்த கிராமம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் அனைத்து சாதியினரும் வசித்து வந்தபோதிலும், பட்டியலினத்தவரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த நிலையில் மிட்டாய் வாங்கச் சென்ற பட்டியலின சிறுவர்களுக்கு நேர்ந்த சாதிய கொடுமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

கிராமத்தில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியின் அருகே பெட்டிக் கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் அனைத்து சிறுவர்களும் சென்று தின்பண்டங்களை வாங்குவது வழக்கம். அது போல, பணத்துடன் கடைக்குச் சென்ற பட்டியலின சிறுவர்களுக்கு கடைக்காரர் தின்பண்டங்கள் கொடுக்க மறுத்துள்ளார். சாதிய கொடுமை தொடர்பான வீடியோ வெளியாகி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிச் சிறுவர்கள் கடைக்குச் சென்று மிட்டாய் கேட்டதும், ““நீங்க யாரும் உள்ளூர் கடையில் தின்பண்டம் வாங்கக் கூடாது. ஸ்கூலுக்குப் போங்க... உங்க வீட்ல எல்லோரிடமும், ‘தின்பண்டம் கொடுக்க மாட்டேங்குறாங்க’னு சொல்லுங்க.. போங்க” என்று கடைக்காரர் விரட்டிவிடுகிறார். அதனால் குழப்பம் அடைந்த சிறுவர்கள் தயங்கி நின்றதும், ‘ஊர் கட்டுப்பாடுடா..உங்களுக்குக் கொடுக்க முடியாது’ என்கிறார்.

கடையில் சிறுவர்கள்
கடையில் சிறுவர்கள்

பணம் கொடுத்தால் பொருள் கொடுக்கும் கடைக்காரர், ‘கட்டுப்பாடு’ என்று சொன்னதைப் புரிந்துகொள்ளக்கூட முடியாத அப்பாவி சிறுவர்கள், ‘கட்டுப்பாடுன்னா..’ என்றதும் கடைக்காரர், ஊர்க் கூட்டம் போட்டு முடிவெடுத்து இருப்பதாக விளக்கம் அளிக்கிறார். அதனால் ஏமாற்றத்துடன் சிறுவர்கள் நகர்கிறார்கள். சாதிய கொடுமை குறித்த அந்த வீடியோ வேகமாக பரவியதால் இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்களிடம் கேட்டதற்கு, “எங்க ஊரில் வசிக்கும் இரு சமூகத்தினரிடம் அடிக்கடி மோதல் நடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடியபோது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எதிர் தரப்பினர் அடித்து விரட்டி விட்டார்கள். அதில் மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த மோதல் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது.

சிறுவர்கள்
சிறுவர்கள்

சில தினங்களுக்கு முன்பு பைக்கில் வந்த சில இளைஞர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தகராறு செய்தனர். அதை அங்கிருந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டதால் மீண்டும் கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அதனால் மாற்று சமூகத்தின் நாட்டாமை ஊர்க்கூட்டம் போட்டு, பட்டியல் சமூகத்தினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு விட்டார்.

அதன் காரணமாகவே பள்ளிக்கூடம் அருகில் இருந்த கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் கொடுக்க மறுத்திருக்கிறார். ஆனால் ஊர்க்கூட்டம் போட்டபோதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ‘பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கிற கடையில் வழக்கம் போல எல்லோருக்கும் பொருள்களை கொடுத்துடுவாங்க..’ என்று புகார் தெரிவித்தார்கள்.

சர்ச்சைக்குரிய கடை
சர்ச்சைக்குரிய கடை

அதனால் ஊர்க்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக் கொள்ள நினைத்த கடைக்காரர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அத்துடன், அந்த வீடியோவை ஊர் சார்பான வாட்ஸ் அப் குழுவிலும் பதிவிட்டார். அது எப்படியோ வெளியில் போய் விட்டது. அந்த வீடியோ இந்த அளவுக்கு வைரலாகும் என்று யாரும் நினைக்கவில்லை” என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளிச் சிறுவர்கள், “நாங்க வழக்கம் போல அந்தக் கடைக்குப் போய் மிட்டாய் கேட்டோம். எப்பவும் காசு கொடுத்ததும் கொடுப்பாங்க.. அன்னிக்கு மிட்டாய் கொடுக்க மாட்டேனு சொன்னாங்க. எதுக்குன்னு கேட்டதுக்கு கட்டுப்பாடுனு சொன்னார். என்ன கட்டுப்பாடு கேட்டபோது மிட்டாய் கொடுக்காம விரட்டிவிட்டுட்டார்” என்றார்கள் அப்பாவியாக.

கடைக்கு சீல் வைப்பு
கடைக்கு சீல் வைப்பு

இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ சுப்புலட்சுமி தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில், கடையில் சாதிய பாகுபாடு இருந்தது தெரியவந்ததால் அந்தக் கடைக்கு தாசில்தார் பாபு சீல் வைத்தார். அத்துடன், தென்காசி எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாதிய பாகுபாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த கடையின் உரிமையாளர் மகேஸ்வரன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், சிவகாசியில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே கடையின் உரிமையாளரின் நண்பரும், சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டவருமான ராமச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் மகேஸ்வரன்
கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் மகேஸ்வரன்

ஏதுமறியாத பள்ளி மாணவர்களிடம் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட கிராமத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளிச் சிறுவர்களுக்கு நேர்ந்த இந்த சாதிய கொடுமை, தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.