Published:Updated:

ஃபேஸ்புக் லைவ்.. ஆதரவற்றோருக்கு உணவு.. திருமணத்தை மாத்தி யோசித்த கோவை இன்ஜினீயர்!

விக்னேஷ் பிரவீனா நிச்சயதார்த்தம்
விக்னேஷ் பிரவீனா நிச்சயதார்த்தம்

கோவையில் இன்ஜினீயர் ஒருவர் தனது திருமணத்தை ஆன்லைனின் லைவ் கொடுத்து, ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க உள்ளார்.

கொரோனா வைரஸால் நாடே முடங்கியுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வெளியில் வந்து பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். பல துறைகளும் வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

அதிலும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, அரசிடம் அனுமதி வாங்குவது என்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன. இதன் காரணமாக, பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகின்றன. சிலர் தங்களது திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த விக்னேஷ் பாபு என்ற சிவில் இன்ஜினீயர் தனது திருமணத்தை ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றாற்போல பல்வேறு மாற்றங்களுடன் நடத்த உள்ளார். இதுகுறித்து விக்னேஷ் பாபு, ``எனக்கும், கோவை டைடில் பார்க்கில் பணியாற்றி வரும் பிரவீனா என்பவருக்கும் வருகின்ற 26-ம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். நானும், பிரவீனாவும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.

திருமணம் அழைப்பிதழ்
திருமணம் அழைப்பிதழ்

எங்களது காதலை வீட்டில் தெரிவித்து, அவர்கள் சம்மதத்துடன் நடத்த கடந்த ஓராண்டாக முயற்சி செய்து வந்தோம். இதற்காக, இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணத்துக்காக மண்டபத்தை புக் செய்து, சுமார் 2,500 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை வைத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சீனாவில் கடந்த சில மாதங்களாக இருக்கும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நம் நாட்டிலும் இது எப்போது முழுமையாக நீங்கும் என்று தெரியவில்லை. முக்கியமாக, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்பட்ட எங்களது காதல் திருமணத்தை திட்டமிட்டபடி அதே நாளில் நடத்த முடிவு செய்தோம். நண்பர்கள், உறவினர்கள் பலரும் கலந்துகொள்ள முடியாததால் அவர்களுக்காக, திருமணத்தை ஃபேஸ்புக்கில் லைவ் கொடுக்க உள்ளோம். மேலும், யூடியூபிலும் திருமண வீடியோவை அப்லோட் செய்ய உள்ளோம்.

விக்னேஷ் பாபு
விக்னேஷ் பாபு

அதேபோல, ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்கள் 2,500 பேருக்கு உணவு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக, குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பேசிவிட்டோம். இதன் மூலம், நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டதைவிட அதிகப்படியான மக்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கும். அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு