Published:Updated:

பாரதியாருக்கும் மன்னார்குடிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரஸ்ய தகவல்!

மன்னார்குடி அருகே பாரதி பிறந்தநாள் விழா
மன்னார்குடி அருகே பாரதி பிறந்தநாள் விழா

மகாகவி பாரதி இங்கு வந்தபோது, மொட்டை தலையுடனும் மீசை இல்லாமலும், பொத்தான் போடாத சட்டை மீது கோட் அணிந்தும், தன்னை காவல்துறை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாகவி பாரதியாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் சமூக, இலக்கிய ஆர்வலர்களும் தமிழக அரசுக்குக் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். மகாகவி பாரதியார் என்ற பெயரைச் சொன்னாலே, திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம், சென்னை திருவலிக்கேணி, புதுச்சேரி ஆகிய ஊர்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் மன்னார்குடி பகுதியில் இவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டுமென இப்பகுதி மக்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? மன்னார்குடி அருகே உள்ள மேலநாகை, பாரதியாரின் வாழ்க்கையில் மிக முக்கிய தடம் பதித்துள்ளது.

பாரதியார் நினைவு மண்டபம்
பாரதியார் நினைவு மண்டபம்
மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் ஆண்டுதோறும் மேலநாகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் சமூக, இலக்கிய ஆர்வலர்களும் இங்கு வந்து பாரதிக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 138வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் தலைமையேற்று பேசிய தமிழ்நாடு கலை இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளர் காமராசு, ‘’பாரதியின் கால் தடம் பதிந்த, இந்த மண்ணில் பல்வேறு அமைப்பினரும் ஒன்றுகூடி பாரதியின் நினைவுகளை போற்றி புகழ்ந்து வருகிறார்கள். தமிழக அரசு மிக விரைவில் இங்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்" என்றார்.

பாரதி தங்கி இருந்த இடம்
பாரதி தங்கி இருந்த இடம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, "1918களில் ஆங்கிலேயர் அரசாங்கம் மகாகவி பாரதியாருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது. பாரதியார் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அங்கும் அவருக்கு நெருக்கடி மிக அதிகமானதால் அவர் மன்னார்குடி அருகே மேலநாகை என அழைக்கபடும் இந்த ஊரில் சில காலம் தங்கி இருந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மிகவும் வசதி படைத்த பிரபல குடும்பங்களில் ஒன்றான கொடியாலம் ரங்கசாமி அய்யங்கார் குடும்பத்திற்குச் சொந்தமான இந்த பங்களாவில்தான் பாரதி தங்கி இருந்தார். மகாகவி பாரதி இங்கு வந்தபோது, மொட்டை தலையுடனும் மீசை இல்லாமலும், பொத்தான் போடாத சட்டை மீது கோட் அணிந்தும், தன்னை காவல்துறை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார். மகாகவி பாரதியின் மிகவும் பிரபலமான முத்திரை பதித்த பாடலான 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாடலை இங்கு தங்கியிருந்த போதுதான் அவர் எழுதினார். இது வரலாற்று புகழ்மிக்க இடமாகவே போற்றப்படுகிறது. இதனால்தான் இங்கு மகாகவி பாரதியாருக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டுமென வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு