Published:Updated:

அடைக்கப்பட்ட சுடுகாட்டுப் பாதை; 20 அடி பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்! - வாணியம்பாடி அவலம்

லோகேஸ்வரன்.கோ

வாணியம்பாடி அருகே பட்டியலின சமூக மக்களுக்கு எதிராகச் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துவைத்துள்ளனர். இதனால், பாலாற்றில் உள்ள பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தைக் கீழே இறக்கி தகனம் செய்யும் அவலநிலை அரங்கேறியிருக்கிறது.

The Dead Body was Brought Down with  the help of Rope
The Dead Body was Brought Down with the help of Rope

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இதுதொடர்பாக, அங்கு வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். அரசு தரப்பில் கண்டுகொள்ளவில்லை.

shocking photo
shocking photo

இதனால், வேறுவழியின்றி பாலாற்றங்கரையில் உயிரிழந்தோரின் சடலங்களை எரியூட்டுகிறார்கள். இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றைக் கடப்பதற்காக அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டது. அப்போதும், சிரமப்பட்டே பாலத்தை ஒட்டியுள்ள பாதையை சுடுகாட்டுக்குப் பயன்படுத்திவந்தனர்.

இதனிடையே, பாலத்தின் இருபுறங்களிலும் பல ஏக்கரில் விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் சிலர், பட்டியலின மக்கள் சடலங்களை தூக்கிச் செல்வதை விரும்பாமல் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் தலையிடாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
பட்டியலின சமூக மக்கள்

பாதை அடைக்கப்பட்டதால் பட்டியலின சமூக மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நாராயணபுரம் காலனியைச் சேர்ந்த குப்பன் (55) என்பவரின் உடலை எரியூட்டுவதற்காக பாலாற்றங்கரைக்கு சுமந்து சென்றனர். விவசாய நிலத்தின் உரிமையாளர்களிடம் வழி கேட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் வழிவிடவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, வேறு வழியின்றி சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து சடலம் இருந்த பாடையை கயிறுகட்டி பாலாற்றுக்குள் இறக்கினர். தயாராக ஆற்றுக்குள் இருந்த சிலர் பாடையைப் பத்திரமாக பிடித்துச் சுமந்து சென்று தகனம் செய்தனர்.

Corpse
Corpse

இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோ வைரலானதையடுத்து, பட்டியலின சமூக மக்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. எனினும், மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் அமைதி காப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.