Published:Updated:

ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் உயிரிழந்த மீனவர்; உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் கதறி அழுத மனைவி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

``சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்குச் சென்று, அங்கு திடீரென உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்" என ராமநாதபுரம் ஆட்சியரிடம் இறந்த மீனவரின் மனைவி கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் உயிரிழந்த மீனவர்; உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் கதறி அழுத மனைவி

``சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்குச் சென்று, அங்கு திடீரென உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்" என ராமநாதபுரம் ஆட்சியரிடம் இறந்த மீனவரின் மனைவி கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Published:Updated:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைகுடியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் சவுதி அரேபியாவுக்கு மீன்பிடி வேலைக்காக, கடந்த ஆண்டு சென்று, ஓராண்டாக வேலை பார்த்துவந்திருக்கிறார். இந்த நிலையில் பணிபுரிந்த இடத்தில், அவர் திடீரென உயிரிழந்துவிட்டதாக அவருடன் சென்ற உறவினர் ஒருவர் முனீஸ்வரனின் வீட்டுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட அவர் மனைவி ஞானசிந்து மற்றும் உறவினர்கள் நிலைகுலைந்துபோயினர்.

உயிரிழந்த மீனவர் முனீஸ்வரன்
உயிரிழந்த மீனவர் முனீஸ்வரன்

அதையடுத்து, இன்று ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து, ``சவுதி அரேபியாவில் இறந்த என்னுடைய கணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் எப்படி இறந்தார் என விசாரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்" எனக் கண்ணீர்மல்கக் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ``விசாரித்து விரைவில் உங்கள் கணவர் உடலை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இறந்த மீனவரின் மனைவி ஞானசிந்து
இறந்த மீனவரின் மனைவி ஞானசிந்து

ஞானசிந்துவிடம் பேசினோம். ``எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலு வருஷம்தான் ஆகுது. ஒன்றரை வயசுல ஆம்பளைப் புளளை இருக்கு. `குழந்தைக்கு விவரம் தெரியாத வயசுலே வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிச்சுட்டு வந்துடுறேன். கொஞ்சம் காசு சம்பாதிச்சதுக்கப்பறம், இங்கே வந்து பிள்ளையை நல்லா படிக்கவெச்சு, நான் பட்ட கஷ்டம் என்னோட புள்ளை படாத அளவுக்கு நல்லபடியா வளர்க்கணும்'னு சொல்லிட்டுப் போனவர்தான், இப்படி எங்களை அநாதையா தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாரு" என நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத அவரை, அருகில் இருந்தவர்கள் தேற்றினர். தொடர்ந்து பேசியவர், ``கடைசியா நானும் குழந்தையும் என்னோட கணவர் முகத்தை பார்க்கணும். தயவுசெய்து அவர் உடலை எப்படியாவது அரசாங்கம் மீட்டுக்கொடுக்கணும்" என்றார்.