Published:Updated:

மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸில் நல்ல முயற்சி!

ட்ரீம் கிச்சன்
ட்ரீம் கிச்சன்

மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 30 லட்சம் வரை நிதி பெற்று, இந்த உணவகம் தொடங்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள அந்த உணவகத்திற்குச் சென்றோம்.

உணவகத்தின் பொறுப்பாளர் கண்ணன் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். 'அண்ணே, உங்களுக்கு இன்னொரு இட்லி?' 'சாம்பார் ஊத்தவாண்ணே' எனக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிக்கும்விதம் பலரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் 'ட்ரீம் கிச்சன்' வாடிக்கையாளர்கள்.

ட்ரீம் கிச்சன்
ட்ரீம் கிச்சன்

கடையின் பொறுப்பாளர் கண்ணனிடம் பேசினோம். ``கடந்த 2018 செப்டம்பர் மாதம் அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி தோழர்கள் சார்பா கலெக்டர்கிட்ட மனு குடுத்தோம். 'எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்கிறது கஷ்டம், ஒரு கபே வைக்க ஸ்பான்சர் வாங்கி தாரேன் எல்லாரும் மொத்தமா சேர்ந்து நடத்துறீங்களா?'னு கலெக்டர் கேட்டார். நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். அதுக்கப்புறம், ஒரு மாசம் டிரெய்னிங் நடந்துச்சு. வாடிக்கையாளர்களை அணுகுவது, சமையல், நிர்வாகம் என எல்லாவற்றையும் கத்துக்கிட்டோம் .

மொத்தம் பத்துப் பேரு வேலை பார்க்கிறோம். கால்களை இழந்தவங்க, சரியாக நடக்க முடியாதவங்க, ஒரு கை இழந்தவங்க, காது கேட்காதவங்கனு பலர் சேர்ந்து உழைக்கிறோம். காலையில 6 மணிக்கு கடையைத் திறந்திடுவோம். சரியா 7 மணிக்கெல்லாம் டிபன் ரெடியாகிடும். சராசரியா, காலையில் 70 பேர் வரைக்கும் சாப்பிட வருவாங்க. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கும். மதியம் 50 சாப்பாடு வரைக்கும் போகும். எங்க உணவகத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது. வாழை இலை, பாக்குமட்டைதான் பயன்படுத்துகிறோம்.

தினமும் 10,000 முதல் 12,000 வரை வருமானம் கிடைக்கும். சனிக்கிழமை வியாபாரம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கிடைக்கிற வருமானத்தை வெச்சி, அதை சரி செஞ்சிக்குவோம். எங்களுக்கான சம்பளத்தை நாங்களே பிரிச்சுப்போம்" என்றார்.

ட்ரீம் கிச்சன்
ட்ரீம் கிச்சன்

'ட்ரீம் கிச்சன்' வேலை செய்து கொண்டிருந்த அந்தோணிராஜிடம் பேசினோம். ``நம்மதான் இங்க ஆல் இன் ஆல். எல்லா வேலையும் செய்வேன். 'கலெக்டர் ஆபீஸ் கேண்டீன்ல வேலை பார்க்குறது பெருமைதான?'. கலெக்டர் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முயற்சிகள் எடுக்கணும்" என்றார்.

உணவகத்தில் சாப்பிட்ட சிலரிடம் பேசிய போது, "சாப்பாடு நல்லா இருக்கு. அவங்களுக்கான வாழ்வாதாரத்தை அவங்களே அமைச்சுக்கிறது நல்ல விஷயம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு