Published:Updated:

`60 ஆண்டு சேவை; விடைபெற்ற சூளிகாம்பாள்’ -பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திய திருப்புகலூர் யானையின் மரணம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூளிகாம்பாள் பயணிக்காத இடங்களே இல்லை என்பதால், திருப்புகலூரின் அடையாளமாகத் திகழ்ந்தது.

சூளிகாம்பாள்
சூளிகாம்பாள்

நாகப்பட்டினம் அருகே உள்ள திருப்புகலூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்தலத்தில், 60 ஆண்டுக்காலமாக இறைவனுக்கு சேவைசெய்து பக்தர்களின் மனம் கவர்ந்த சூளிகாம்பாள் யானை, நேற்று இறைவனடி சேர்ந்தது. இது, அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சூளிகாம்பாள்
சூளிகாம்பாள்

1959ல் ஐந்து வயது குட்டி யானையாக திருப்புகலூர் திருமடத்திற்கு வரப்பெற்ற யானைக்கு, 17-வது ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம்தான் சூளிகாம்பாள் எனப் பெயரிட்டார். அன்று முதல் இன்று வரை தனது குணத்தாலும், கம்பீரத்தாலும் பல்வேறு மக்களைக் கவர்ந்தது சூளிகாம்பாள். ஆதீன திருக்கோயில்கள் குடமுழுக்கு மற்றும் திருக்கோயில் விழாக்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிரதானமாக செயல்பட்டுவந்தது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், சூளிகாம்பாள் பயணிக்காத இடங்களே இல்லை என்பதால், சூளிகாம்பாள் திருப்புகலூரின் அடையாளமாகத் திகழ்ந்தது. ஆதீன குருபூஜை நாளில் ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் திருக்கோயிலுக்கு எழுந்தருளும்போது, யானை பின்னோக்கிச் செல்லும் அழகு தனித்துவமானது. தமிழக அரசால் நடத்தப்பெற்ற யானை நல்வாழ்வு புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்று, அங்கு நடத்தப்பெற்ற போட்டிகளில் பங்குகொண்டு முதல் பரிசை வென்று தமிழகத்திலேயே சிறந்த யானை என விருதும் பெற்றுள்ளது.18 -வது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின்படி சூளிகாம்பாளின் பராமரிப்பு மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

சூளிகாம்பாள்
சூளிகாம்பாள்

இவற்றை நேரில் ஆய்வுசெய்த வனத்துறை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், 'தமிழகத்திலேயே இயற்கையான முறையில் சூளிகாம்பாள் பாதுகாக்கப்படுகிறது' என சான்றளித்துள்ளனர்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று (21.10.2019) சூளிகாம்பாளின் உடல்நிலையில் தளர்வு ஏற்பட்டது. திருக்கோயில் வளாகத்திலிருந்து வெளியே வந்த சூளிகாம்பாள், காலை 11 மணியளவில் திடீரென கீழே படுத்தது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் சூளிகாம்பாளை பரிசோதித்து, இறந்துவிட்டதாக அறிவித்ததும் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

சூளிகாம்பாள்
சூளிகாம்பாள்

தன் 60-ம் அகவையில் திருப்புகலூர் பெருமான் திருவடி நிழலில் முக்திபெற்ற சூளிகாம்பாளுக்கு, அனைவரும் கண்ணீர் சிந்த அஞ்சலி செலுத்தினர். விடைபெற்றாள் சூளிகாம்பாள்.