Published:Updated:

`அவசரச் சட்டத்துக்கு டாக்டர் சைமனின் பெயர்..!’ - நிரந்தரத் தீர்வை விவரிக்கும் மருத்துவர் சங்கம்

மருத்துவர்
மருத்துவர்

மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது, நிரந்தர தீர்வைக் கொடுக்காது என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக பெரும் யுத்தம் நடத்தி வருகின்றனர் மருத்துவப் பணியாளர்கள். என்னதான் கவச உடை அணிந்திருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்பதை முழுமையாக அறிந்து தைரியமாகக் களத்தில் இறங்கி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலிருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர் மருத்துவர்கள்.

சீனாவில் வைரஸ் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் தற்கொலைப் படையினர் என்றே அழைக்கப்பட்டனர். அனைத்து நாட்டு மக்களும் தங்களுக்காகப் பணிபுரியும் மருத்துவர்களின் செயலைப் பாராட்டி அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு நெகிழ்ச்சியான செயல்களைச் செய்து வருகின்றனர்.

மருத்துவர்
மருத்துவர்

ஆனால், இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களின் நிலை அப்படியே தலைகீழாக உள்ளது. இங்கு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் நலனுக்காக வேலை செய்யச் சென்ற டாக்டர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும்விட உச்சக்கட்டமாகச் சென்னையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சைமன், அதே வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மருத்துவரின் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். மேலும் சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்ற அனைவரையும் அடித்துள்ளனர். மக்களுக்குப் பயந்து மருத்துவரின் உடலை அப்படியே சாலையில் விட்டுச்செல்லும் நிலைக்குச் சுகாதாரப் பணியாளர்கள் தள்ளப்பட்டனர்.

கொரோனாவால் இறந்த டாக்டர் சைமன்
கொரோனாவால் இறந்த டாக்டர் சைமன்

இறந்தவரின் உடலிலிருந்து வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதைத்தான் தற்போது வரை அனைத்து ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். இதை மக்களுக்கு விளக்கிக் கூறியும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

1897-ம் ஆண்டு தொற்று நோய் சட்டத்தில் திருத்தம் செய்து, கொள்ளை நோய் பரவும் காலங்களில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ள இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த அவசரச் சட்டத்துக்கு, சென்னையில் உயிரிழந்த மருத்துவர் சைமனின் பெயரை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் எவிடென்ஸ் கதிர், ``மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தச் சட்டத்துக்கு டாக்டர் சைமன் சட்டம் என்று பெயரிட வேண்டும் என மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

கொரோனா போர்
கொரோனா போர்

அது மட்டுமல்லாமல், இந்தச் சட்டத்தின் பயனாளிகளாகத் தூய்மைப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். பாதிக்கப்படுகிற மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இந்தச் சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆகவே, நிவாரண விவரங்களைச் சேர்த்து இதில் வெளியிட வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மீது பாகுபாடு காட்டக் கூடாது என்பதையும் இந்தச் சட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிக அளவுக்குக் கட்டணங்களை வசூல் செய்கின்றன. இதனால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் ஒரே அளவில் வரையறுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதற்கென தனிச் சட்டம் தேவை. இதை மீறுகின்ற தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்துக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் விதிகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

இதையடுத்து, அவசரச் சட்டம் குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், ``இந்தியா முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் முழுப் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. இதைத் தடுக்க மத்திய அரசு ஒரு தனி மத்திய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஏற்கெனவே இதைக் கொண்டுவருவதாகக் கூறினார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து 7 ஆண்டுவரை சிறை, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் என அறிவித்துள்ளனர், ஆனால், இது ஏற்புடையது அல்ல. இது ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே வரவேற்கத்தக்கதே தவிர முழுமையான வரவேற்பு இல்லை. ஏனெனில் இது கொள்ளை நோய்க்கு மட்டுமே பொருந்தும். மற்ற சாதாரண நேரங்களில் மருத்துவர்கள் தாக்கப்பட்டால் இதன்மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் இது பெரிய அளவு பயனுள்ள ஒரு சட்டம் இல்லை.

மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

எனவே, மத்திய அரசு கூறியதுபோல் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக அரசு புதிய, தனிச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் தாக்கப்படுவதற்கான சமூக பொருளாதார காரணிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் மருத்துவத்துறை அரசிடம் இல்லாமல் தனியார்மயமாக உள்ளது. ஏழை மக்களுக்கு முறையான மருத்துவம் கிடைப்பதில்லை. மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை மீது மக்களுக்குக் கடுமையான கோபம் உள்ளது. அந்த அதிருப்தியை அரசு மீது காட்டுவதற்குப் பதிலாக அடிமட்டத்தில் தங்களுக்காக வேலை செய்ய வரும் மருத்துவர்கள் மீது காட்டுகிறார்கள்.

மரணிக்கும் மருத்துவர்கள்... மரித்துப் போன மனிதம்... கொரோனாவால் தமிழகத்தின் முகம் மாறுகிறதா?

மருந்துகள் சரியில்லை, சேவை சரியில்லை என்பதற்கெல்லாம் அரசுதான் காரணம். அப்படியான சூழலில் அரசை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, மக்கள் மருத்துவர்களைத் தாக்கிவிடுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

மருத்துவத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும். இதுவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். மருத்துவ குறைபாட்டுக்கு மருத்துவர்கள் காரணம் என மக்கள் அவர்களைத் தாக்குவது உலகம் முழுவதும் அம்பலமாகியுள்ளது. பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா, தன் சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறது. மக்களுக்கான முறையான மருத்துவம் வழங்காததே இதற்கு காரணம். இந்தச் சூழலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு