புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள சீதாராமன்பட்டினம கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சநாதன் (53). இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
மீனவரான குஞ்சுநாதன் மீன்பிடித் தடைக்காலங்களிலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாதபோதிலும் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி குஞ்சுநாதன் கட்டடப் பணிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கட்டடத்தில் சாரம் கட்டிக்கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை சக கட்டடத் தொழிலாளர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஞ்சநாதனை, அவரின் குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தலையில் அடிபட்டிருப்பதால் காப்பாற்றுவது சிரமம் என்றும் கூறியிருக்கின்றனர். பின்னர் குஞ்சநாதனின் உடல்நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால், அதிர்ந்துபோன குஞ்சுநாதனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து பேசி, குஞ்சுநாதனின் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் விதிகளுக்கு உட்பட்டு குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தோடு, குஞ்சநாதனின் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். பின்னர் திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனைகளிலுள்ள நான்கு நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளிலுள்ள மருத்துவக் குழுவினர் மூலம் அனுப்பிவைத்தனர். இவரின் உடல் உறுப்புகள் அவர்களுக்குப் பொருத்தப்படவிருக்கின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக அவரின் பிள்ளைகள், ``இறந்தாலும், எங்க அப்பா பல குடும்பத்தை வாழவைக்கப்போகிறார்'' என உருக்கமாகப் பேசியது அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது.