Published:Updated:

‘நம்பிக்கையே குணமடையச் செய்தது!’ -`கொரோனா' அனுபவங்களைப் பகிர்ந்த வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி
இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி

‘‘காவல்துறை உயரதிகாரிகளும் மருத்துவர்களும் கொடுத்த நம்பிக்கையே என்னை முழுமையாகக் குணமடையச் செய்தது’’ என்கிறார், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி.

கொரோனாவிலிருந்து மீண்டு குணமாகியிருக்கிறார் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி. வேலூர் அரசு மருத்துவமனையில் 14 நாள்கள் சிகிச்சை பெற்ற பிறகு தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அவரை அமைச்சர் நிலோஃபர் கபில், கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் கைதட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மறுவாழ்வு பெற்றுவந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி நம்பிக்கையான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

‘‘கொரோனா வெல்ல முடியாத நோய் அல்ல. நம்பிக்கையுடன் இருந்தால் அந்தத் தொற்றிலிருந்து எளிதில் மீண்டு வரலாம்.

இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி
இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி

அரசு மருத்துவமனையில் இருந்த நாள்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரக்கக் குணத்துடன் நோயாளிகளிடம் நடந்துகொள்வதைப் பார்த்து வியந்துபோனேன். அரசு மருத்துவமனை மீதான தவறான எண்ணங்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். டி.ஐ.ஜி மேடமும், எஸ்.பி சாரும் அடிக்கடி என்னைப் போனில் தொடர்புகொண்டு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

1970, 1980 காலகட்டத்தில் வெளிவந்த மெலோடிஸ் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாள்களில் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு ரசித்தேன். புத்தகங்களைப் படித்தேன்.

என் கணவனர் சிதம்பரத்தில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றுகிறார். ப்ளஸ் டூ படிக்கிற ஒரு மகளும், 5-ம் வகுப்பு படிக்கிற ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் அதிகமாகப் பேசுவதற்கு நேரம் கிடைத்தது. அதேபோல், உறவினர்களும் நண்பர்களும் என்னிடம் நலம் விசாரித்தார்கள். நான் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிய நாள்களிலிருந்து பேசாத ஜனங்கள் கூட இப்போது என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி. மனசு திடமாக இருக்கக் காரணமே உயரதிகாரிகள் கொடுத்த நம்பிக்கைதான். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய என்னை இவ்வளவு பேர் நேரில் வந்து வரவேற்றது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்ஸ்பெக்டரை வரவேற்ற அமைச்சர் நிலோஃபர் கபில்
இன்ஸ்பெக்டரை வரவேற்ற அமைச்சர் நிலோஃபர் கபில்

பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் பலரும் நம்பிக்கை கொடுத்தனர். இந்தக் காக்கிச் சட்டை அணிந்துள்ளதால் நிறைய கிரெடிட் கிடைத்திருக்கிறது. நல்ல மனிதர்களைச் சம்பாதித்துள்ளேன். வீடு திரும்பினாலும் என்னை மற்றவர்களிடமிருந்து சில நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். நான் போடக்கூடிய ஆடைகளைத் தினமும் துவைத்துக்கொள்ள வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். சத்து மாத்திரை, கபசுரக் குடிநீர், நிலவேம்பு பொடியைக் கொடுத்துள்ளனர். அவற்றைத் தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்கிறேன்.

தானிய வகை உணவுகளையும் முட்டையும் சாப்பிட்டால் நல்லது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மருத்துவர்களின் அறிவுறுத்தலைக் கடைப்பிடித்து வருகிறேன். நான் பயந்தது என்னவென்றால், ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியில் இருந்தேன். குழந்தைகளைப் பார்க்க முடியாமல் போனதால் உயரதிகாரியிடம் அனுமதி பெற்று ஒரு நாள் குழந்தைகளைப் பார்க்க வாலாஜாபேட்டைக்குச் சென்றேன்.

சிதம்பரத்திலிருந்து கணவர் குழந்தைகளை அழைத்துவந்தார். அவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய மறுநாளே தொற்று கண்டறியப்பட்டது. கணவருக்கும் குழந்தைகளுக்கும் தொற்று இருக்குமோ என்று பயந்துவிட்டேன்.

கலெக்டர், எஸ்.பி-யுடன் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி
கலெக்டர், எஸ்.பி-யுடன் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி

நல்ல வேளையாக அவர்களுக்குத் தொற்று இல்லை. பாதிக்கப்பட்ட நபர்களிடம் தைரியமான வார்த்தைகளைச் சொன்னால்போதும், அதுவே அவர்களை மீண்டு வர வைக்கும். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அடிக்கடி கூழ் குடிப்பேன். டிராக்டர் ஓட்டுகிறதைத் தவிர விவசாய வேலைகள் அனைத்தும் எனக்குத் தெரியும். நாற்று நடுவதில் இருந்து களையெடுப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்துள்ளேன். காவல்துறைக்கு வந்த பிறகு விவசாயத்தைக் கவனிக்க முடியவில்லை. ஆனாலும், என் குடும்பத்தினர் இன்னும் விவசாயம் செய்கிறார்கள்’’ என்றார் மீண்டு வந்த புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு