Published:Updated:

`தனுஷ்கோடி மணல் புயலைத் தடுக்க போடப்பட்ட மட்டை வேலி' - கடல் அலையில் சிக்கி சின்னாபின்னமானது!

தனுஷ்கோடி பகுதியில் வீசுல் மணல் புயலுக்கும், கடல் அரிப்புக்கும் இடைவெளியின்றி கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர்களே ஈடுகொடுக்க முடியாத நிலையில், இடைவெளி கொண்ட பனைமட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள வேலி, எப்படி மணல் பரவலைத் தடுக்கும்?

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் சிக்கிய மட்டை வேலி.
தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் சிக்கிய மட்டை வேலி. ( உ.பாண்டி )

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வீசிவரும் மணல் புயலைத் தடுக்க பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்திய அதிகாரிகளின் செயல், நிதி விரயத்தையே ஏற்படுத்தும் என மீனவர்கள் சொன்னது நடந்துவிட்டது.

தனுஷ்கோடி கடல் பகுதியில் மட்டை வேலி
தனுஷ்கோடி கடல் பகுதியில் மட்டை வேலி
உ.பாண்டி

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் உருக்குலைந்துபோனது துறைமுக நகரமான தனுஷ்கோடி. அப்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை சூறாவளிக் காற்று வீசுவது வழக்கம். இந்தக் காற்றின் வேகத்தினால் கடற்கரையோரம் உள்ள மணல் குன்றுகள் முகுந்தராயர் சத்திரம் வரை இருந்த சாலைகளில் குவிந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. இதைத் தடுக்க, சாலையின் இருபுறங்களிலும் சவுக்கு மரங்கள் நடப்பட்டன. அவற்றையும் மீறி மணல் சாலையை நோக்கி நகர்ந்தது. இதனால் மணல் குன்றுகள் நகராமல் இருக்க சாலையின் இருபுறமும் ஆங்காங்கே தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. அந்த தடுப்புச் சுவரையும் தாண்டி மணல் சாலைக்கு வரும் நிலை நீடித்தது.

இந்நிலையில், சூறாவளிக் காற்று வீசும் காலங்களில் வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், மீனவர்களுக்கு இடையூறாக இருந்துவரும் மணல் புயலைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறையினர் புதிய முறையினை மேற்கொண்டனர். இதற்காக, நகரும் மணல் குன்றுகள் அதிகம் உள்ள பகுதிகளின் இருபுறமும் பனை மட்டைகளைக்கொண்டு வேலி அமைத்தனர். தனுஷ்கோடி பகுதியில் வீசும் மணல் புயலுக்கும், கடல் அரிப்புக்கும் இடைவெளியின்றி கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர்களே ஈடுகொடுக்க முடியாத நிலையில், இடைவெளிகொண்ட பனைமட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள வேலி எப்படி மணல் பரவலைத் தடுக்கும் என மீனவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், இதனால் அரசின் நிதிதான் விரயமாகும் எனவும் கூறியிருந்தனர்.

தனுஷ்கோடி மணல் புயலை தடுக்க மட்டை வேலி
தனுஷ்கோடி மணல் புயலை தடுக்க மட்டை வேலி
உ.பாண்டி

ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிளோ... மணல் நகருவதைத் தடுக்க வெளிநாடுகளில் இதுபோன்ற வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதை இப்பகுதியில் சோதனை முறையில் செய்துபார்க்கவே மட்டைவேலி அமைப்பதாகவும் கூறியிருந்தனர். இதுகுறித்து `கான்கிரீட் சுவரே தடுக்கல...பனைமட்டை வேலி எப்படித் தடுக்கும்?' - கொதிக்கும் மீனவர்கள் என்ற செய்தியைக் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போலவே தனுஷ்கோடி அரிச்சமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலிகள், கடல் கொந்தளிப்பில் சிக்கி சின்னாபின்னமாகிப்போனது. கடந்த சில நாள்களாக தனுஷ்கோடி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுவருகிறது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் பாதுகாப்புக்காக கடற்கரை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த கருங்கல் தடுப்புகள் சரிந்து கடல் நீருடன் கலந்தது. மேலும், மணல் புயலைத் தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சோதனை முறையில் அமைத்த பனை மட்டை வேலிகளும் கடல் அலைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னாபின்னமாகிப் போனது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் சிக்கிய மட்டை வேலி.
தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் சிக்கிய மட்டை வேலி.
உ.பாண்டி

தனுஷ்கோடி கடல் பகுதியை நன்கு அறிந்துவைத்துள்ள மீனவர்களின் கருத்தை அறியாமல், வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டம் எனக் கூறி, மணல் புயலைத் தடுக்க பனைமட்டை வேலி அமைத்தனர் அதிகாரிகள். அதிகாரிகளின் இச்செயலால் மணல் புயயோ, கடல் அலைகளையோ கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே கூறியபடி, அரசின் நிதி மட்டும்தான் வீணடிக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுகின்றனர் மீனவர்கள்.