Election bannerElection banner
Published:Updated:

தேனி: பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாயமான உடல்! - அரசு மருத்துவமனையில் அலட்சியம்... கொதித்த உறவினர்கள்

அய்யாவு
அய்யாவு

இறந்த முதியவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் கொடுக்காமல், வேறொருவருக்கு மாற்றிக்கொடுத்த சம்பவம் தேனி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு (வயது 71). இவர், வத்தலக்குண்டு பேருந்து நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 16-ம் தேதி, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில், உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அய்யாவு அழைத்துவரப்பட்டார்.

அய்யாவு உறவினர்கள்.
அய்யாவு உறவினர்கள்.
ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்: தேனி மாவட்டத்தில் வெல்லப்போவது யார்?

தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அய்யாவு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அய்யாவு உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தகவலறிந்து வந்த அய்யாவு உறவினர்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அய்யாவு உடலைக் கேட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக் கூடத்தில் அய்யாவு உடல் இல்லை. இதை அறிந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். விசாரணையில் இறங்கிய மருத்துவமனை அதிகாரிகள், பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் உடலுக்கு பதிலாக, அய்யாவு உடலை மருத்துவமனை ஊழியர்கள் மாற்றிக் கொடுத்து அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரிக்கவந்த ஏ.டி.எஸ்.பி சங்கரன்
விசாரிக்கவந்த ஏ.டி.எஸ்.பி சங்கரன்

தகவலறிந்து வந்த கானாவிலக்கு காவல்துறையினர், அய்யாவு உடலைப் பெற்றுச் சென்ற ராமு உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசினர். ஆனால், அய்யாவு உடலை ராமு உறவினர்கள் இறுதி மரியாதை செய்து எரித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதை அறிந்த அய்யாவு உறவினர்கள், ஆத்திரமடைந்து, கானாவிலக்கு காவல் நிலையத்தில் முறையிட்டனர். சாலைமறியல் போராட்டம் நடத்தவும் முயன்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தேனி மாவட்ட ஏ.டி.எஸ்.பி சங்கரன், அய்யாவு உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், ராமு உறவினர்களிடமிருந்து, அய்யாவு அஸ்தியைத் தாங்கள் பெற்றுச் செல்வதாகக் கூறி சமாதானம் ஆகினர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்காமல், வேறு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், தேனி அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி: இ-பாஸ் சோதனை உண்டு... கொரோனா சோதனை இல்லை! - எல்லையில் கவனம் செலுத்துமா மாவட்ட நிர்வாகம்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு