Published:Updated:

தமிழ் தெரியும்... தமிழி..?புத்தாண்டு - சித்திரைத் திருநாள் சிறப்பு பகிர்வு!

தமிழ்

ஒரு கட்டத்தில் மொழியியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்களிடையே ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களை அடுத்து, தமிழ் மொழி வரிவடிவத்தின் பெயர் `தமிழ் பிராமி’ என்பதை விடுத்து, `தமிழி’ என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ் தெரியும்... தமிழி..?புத்தாண்டு - சித்திரைத் திருநாள் சிறப்பு பகிர்வு!

ஒரு கட்டத்தில் மொழியியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்களிடையே ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களை அடுத்து, தமிழ் மொழி வரிவடிவத்தின் பெயர் `தமிழ் பிராமி’ என்பதை விடுத்து, `தமிழி’ என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Published:Updated:
தமிழ்

வெறுப்புத் துறப்பு: தலைப்பைப் படித்ததுமே... ஏற்கெனவே, `தமிழன்னை கறுப்பா... சிவப்பா... வெள்ளையா?’னு பஞ்சாயத்து போயிட்டிருக்கு. இந்த நேரத்துல இதுவேறயா?’ என்று யோசித்துவிடாதீர்கள். சித்திரைத் திருநாள் நாள், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் விடுமுறை நாள் என்றெல்லாம் கொண்டாடப்பட்டுவரும் இந்த நேரத்தில் தமிழ் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்கிற ஒரே நோக்கத்துக்காக மட்டுமே இந்தக் கட்டுரை!

அ, ஆ, இ, ஈ... உயிர் எழுத்துகள்; க், ங், ச், ஞ்... மெய்யெழுத்துகள்; க, ங, ச, ஞ... உயிர் மெய் எழுத்துகள் எல்லாம் நமக்குத் தெரியும். இவற்றின் இந்த வரிவடிவம், கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான்! இதற்கு முந்தைய வரிவடிவத்தைப் பார்த்தால்... தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் வரிவடிவத்தைப் பார்த்ததுபோல தலைச்சுற்ற ஆரம்பித்துவிடும்.

கல்வெட்டு
கல்வெட்டு

ஆம்... ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த செம்மொழியான தமிழின் வரிவடிவம், இன்றைக்கு நாம் பார்க்கின்ற வடிவத்தில் இல்லை. வெறுமனே `/' இப்படியொரு கோடு. இதுதான் ர. ஆக, `+ என்பது `க' என்றாக இருந்தது. இன்றைய வடிவத்தை எட்டுவதற்கு முன்பாக, தமிழின் வரிவடிவம் என்பது... கிட்டத்தட்டக் குழந்தைகளின் கிறுக்கல்போலத்தான். அதுவே வளர்ந்து வளர்ந்து இன்றைய வடிவத்தில் வந்து நிற்கிறது.

இப்படி உலகில் இருக்கும் பல்வேறு மொழிகளுக்கும் வரிவடிவங்கள் இருக்கின்றன. அத்தகைய வரிவடிவத்துக்குப் பெயர்களும் உண்டு. இந்தி, சம்ஸ்கிருதம் எல்லாம் தேவநாகரி என்கிற வரிவடிவத்தைக் கொண்டவை. தமிழ்... அது `தமிழ் பிராமி’ என்றே பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த வரிவடிவத்தின் பெயர் தமிழி என்று மாற்றப்பட்டு, தற்போது அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய தொல்பொருள் ஆய்வு முடிவுகளின்படி தமிழ் எழுத்துகளின் காலம்... சுமார் 3,000 ஆண்டுகள். இந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் எப்படி எழுதப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அறிய கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகள் நமக்கு உதவுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி எழுதப்பட்டாலும் தமிழ் என்றும் தமிழ்தான்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில்தான், இந்தியா முழுமையுமே கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் படிக்கப்பட்டன. மௌரிய மன்னர் அசோகர் காலத்தில் அங்கு பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியின் வரிவடிவம், `அசோகன் பிராமி’ என்று அழைக்கப்பட்டது. அதேபோல, தென்இந்தியாவில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகள், தமிழ் பிராமி என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் மொழியியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்களிடையே ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களை அடுத்து, தமிழ் மொழி வரிவடிவத்தின் பெயர் `தமிழ் பிராமி’ என்பதை விடுத்து, `தமிழி’ என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்வெட்டு
கல்வெட்டு

தமிழகத் தொல்பொருள்துறை, தமிழாராய்ச்சி நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களும் பெரும்பாலான கல்வெட்டியல் அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களும் தமிழி என்பதை இறுதியாக ஏற்று, அதையே பயன்படுத்தி வருகின்றனர். இனி, தமிழ் மொழியின் வரிவடிவம்... தமிழி என்பது மட்டுமே!

ஆச்சர்யமான... அற்புதமான தமிழ் மொழியின் வரலாறு குறித்தும், கல்வெட்டுகள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருப்பவர், தொல்லியல் அறிஞர் முனைவர் பத்மாவதி. இந்தத் தமிழி பற்றி அவரிடம் பேசியபோது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உலகில் நிலவிய பழைமையான நாகரிகங்களுள் தமிழ் நாகரிகமும் ஒன்று. தமிழ் மொழியும் எழுத்தும் மிகவும் முக்கியமானவை என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. பொருந்தல், கீழடி அகழாய்வுகளிலும் அதற்கு முன்னரே கொற்கையில் செய்த அகழாய்விலும் தமிழ் எழுத்துகளின் காலம் பற்றி நம்மால் அறிய முடிகிறது. கொற்கை அகழாய்வில் கி.மு 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓட்டில் எழுத்துச் சான்றுகள் கிடைத்துள்ளன.

சமீபகாலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகளை என்ற ஊரில் செய்த அகழாய்வில் சங்க காலம் கி.மு 12-ம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கியதைத் தொல்லியல் ஆய்வு விஞ்ஞானபூர்வமாக நிரூபித்துள்ளது. கி.மு. 12-ம் நூற்றாண்டு என்பது, இன்றைக்குச் சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்தக் காலத்திலேயே இத்தகைய சிறப்பான ஒரு நிலையைத் தமிழும் தமிழ்ச் சமூகமும் அடைந்திருக்கிறது என்றால், அதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ்ச் சமூகமும் மொழியும் கருவாகி, உருவாகியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முனைவர் பத்மாவதி
முனைவர் பத்மாவதி

மொழிக்குத் தெளிவான இலக்கணமும் வரி வடிவமும் தோன்ற எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும், எந்தளவுக்குப் பழைமையானது நம் தமிழ்மொழி என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அத்தகைய வியப்பைத் தரும் கல்வெட்டுகள், தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும், பிற தேசங்களிலும்கூட நம் மன்னர்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழி எழுத்துகள் கல்லில் பொறிக்கப்பட்டிருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மறுகால்தலை என்ற ஊரில்தான். 1903-ல் ஆங்கிலேயர் காலத்தில் சர்வேயராகப் பணிபுரிந்த கெமைட் என்பவர்தான் அதைக் கண்டறிந்தார். அதன் பின்னர், பல இடங்களில் உள்ள மலைகளில் கண்டறியப்பட்டு படித்து, இதுதான் சங்க காலத்தில் நிலவிய எழுத்து முறை என்று அறிந்துகொள்ளப்பட்டது.

தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் இலக்கணமும் சிறந்து விளங்கிய காலத்தின் தொடக்கம் சங்க காலம். சங்க காலம் என்பது கி.மு 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை நிலவிய காலம் என்று நாம் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில்தான் ஏராளமான இலக்கியங்கள் தோன்றின. இவற்றைதான் நாம் சங்ககால இலக்கியங்கள் என்று அழைக்கிறோம். இக்காலகட்டத்தில் நிலவிய எழுத்தைதான் `தமிழ் பிராமி’ என்றும் `பண்டைத்தமிழ் எழுத்துகள்’ என்றும் அழைக்கப்பட்டு, தற்போது `தமிழி’ என்று வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், மறுகால்தலை மலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழி(தமிழ் பிராமி) கல்வெட்டு
திருநெல்வேலி மாவட்டம், மறுகால்தலை மலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழி(தமிழ் பிராமி) கல்வெட்டு
வட்டெழுத்து
வட்டெழுத்து

இந்த எழுத்து ஏறத்தாழ கி.பி 3-ம் நூற்றாண்டு முதல் வளர்ச்சி பெறத் தொடங்கியபோது அதில் மாற்றம் ஏற்பட்டது. இந்த வளர்ச்சியின் உச்சம்தான் வட்டெழுத்து ஆகும். இவ்வாறு கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி 8-ம் நூற்றாண்டு வரை எழுத்தின் வளர்ச்சியடைந்த காலகட்டத்தை மாற்றம் நிகழ்ந்த காலம் (Transition Period) என்று கூறலாம். இந்த வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் கண்டறியப்பட்டிருக்கிறது” என்றவர் கல்வெட்டுகளை எங்கெல்லாம் காணலாம் என்பது பற்றியும் பேசினார்.

``கல்வெட்டுகள் பரவலாக மலைகளில் உள்ள குகைத் தளங்களில், பாறைகளில், தூம்புகளில் எல்லாம் உள்ளன. மேலும் தமிழ் மன்னர்கள் கட்டிய சிவன், பெருமாள் கோயில்களில் கல்வெட்டுகளைக் காணலாம். அக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள், நடந்த வழிபாடுகள், திருவிழாக்கள், இசைக்கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் நிகழ்த்திய கூத்து வகைகள், விவசாயம், வரி விதிப்பு, நீர்ப்பாசனம், கிராம ஆட்சி, நிர்வாகம், மன்னர்கள் பெற்ற வெற்றிகள் போன்ற பல செய்திகளை கல்வெட்டுகள் மூலமாக அறிந்துகொள்ளலாம்” என்றவரிடம், தற்போது கல்வெட்டுகள் பற்றிய படிப்பை எங்கு கற்கலாம் என்று கேட்டோம்.

கல்வெட்டு
கல்வெட்டு

``தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முதன்முதலில் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டுக் கற்றுக்கொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைதான். அங்கு ஏதாவது ஒரு பாடத்தின் கீழ் பட்டம் பெற்றவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பில் இடமளித்து கற்றுத் தரப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு பட்டய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தொல்லியல் படிக்கலாம். தொல்லியல் துறையில் தற்போது பலர் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவர்கள் பயன்பெறும் பொருட்டு 10-ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமென்று ஆர்வமுடன் வருபவர்களுக்குச் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன” என்றார் பத்மாவதி.

உலகில் உள்ள மொழிகள் அனைத்தும், அந்தந்த மொழி பேசுவோருக்கு பெருமையானவையே. அந்த வகையில், தமிழருக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மொழியின் வரிவடிவத்துக்கு தமிழி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதும் பெருமையே!

வாழ்க தமிழ்... வாழிய நற்றமிழர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism