Published:Updated:

நீலகிரி: கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர்! - ஒரே வாரத்தில் மழைக்குச் சரிந்து விழுந்த அவலம்!

சேரங்கோடு ஊராட்சியில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வாரம் கட்டி முடிக்கப்பட்ட இன்டர்லாக் தடுப்புச் சுவர் ஒருநாள் மழைக்கே தாங்காமல் முழுமையாகச் சேதமடைந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தாள்- பூச்சக்கல் சாலையை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூபாய் 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டர் விடப்பட்டு இந்த நிதியின் மூலம் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்றுவந்தன. ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் பழைய தடுப்புச் சுவர்மீது தரமற்ற முறையில் இன்டர்லாக் கற்களைப் பொருத்தி, பூசி மெழுகுவதாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

சேதமடைந்த தடுப்புச் சுவர்
சேதமடைந்த தடுப்புச் சுவர்

இந்தநிலையில், நேற்று பெய்த மழையில் இன்டர்லாக் கற்கள் அனைத்தும் பெயர்ந்து அருகிலுள்ள வாழைத் தோட்டத்தில் சரிந்தன. மேலும், பாலத்திலும் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ``எங்களுக்காக அரசு ஒதுக்கிய 24 லட்சம் ரூபாயில் 4 லட்சம் ரூபாய்கூட முறையாகச் செலவிட்டிருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. கடந்த வாரம் கட்டி‌ முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் ஒரு நாள் மழைக்குக்கூட தாங்காமல்போனதை உரிய ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததாரர் மற்றும் துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சேரங்கோடு ஊராட்சி அலுவலர் ஒருவர், ``இது போன கவர்மென்ட் டெண்டர்விட்டது. அகிலேஷ்னு ஒருத்தர் டெண்டர் எடுத்து சொதப்பிட்டார். திரும்ப ஆல்ட்டர் பண்ணச் சொல்றோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு