கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

கடைசி ராஜாவுக்கு இறுதி வணக்கம்!

 டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி
பிரீமியம் ஸ்டோரி
News
டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி

சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ராஜாவுக்கு ஆர்வம் அதிகம். நல்ல பேச்சாளரும்கூட.

‘சீமராஜா’வாக சிவகார்த்திகேயன் நடித்தது கற்பனைக் கதாபாத்திரமல்ல. சென்ற வாரம் வரை உயிருடன் வாழ்ந்தவர் அந்த ராஜா. தென்னகத்தின் பிரபலமான சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது ராஜா, டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. ‘தென்னாட்டுப்புலி நல்லகுத்தி சுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி’ என்பது அவரது முழுப்பெயர்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில், 7,400 ஏக்கரில் உள்ள மலைகள் அனைத்தும் ஜமீனுக்குச் சொந்தமானது. அதைவிட முக்கியம், நெல்லையின் அல்வா அந்தப் பகுதிக்கு வரக் காரணமே சிங்கம்பட்டி ஜமீன்தான். 18-ம் நூற்றாண்டில் அப்போதைய ஜமீன், காசிக்குப் பயணமாகச் சென்றிருக்கிறார். அங்கிருந்த சமையல்காரர் அவருக்கு ஒரு இனிப்பு செய்து கொடுத்திருக்கிறார். அதன் சுவையில் மயங்கிய அவர் அந்தச் சமையல்காரரை உடன் அழைத்து வந்து தன் அரண்மனையில் தினமும் அதைச் செய்து கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த இனிப்புதான் நெல்லையின் அடையாளமான ‘அல்வா.’

சிங்கம்பட்டி ஜமீனின் 31வது ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி, தனது மூன்றாம் வயதிலேயே(1934) தந்தையை இழந்தார். சிறுவயதாக இருந்ததால் அவரது ஜமீன் சொத்துகள் அனைத்துக்கும் திருநெல்வேலி கலெக்டர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ராஜா, இலங்கையில் உள்ள ஆங்கிலேயர்களுக்கான கல்விச்சாலையில் படிக்க வைக்கப்பட்டார். அதனால் ராஜா ஆங்கிலம் பேசினால் சப்டைட்டில் தேவைப்படும் அளவுக்கு இருக்கும். இந்தியாவில் மன்னராட்சி தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் கடைசி மன்னராகப் பொறுப்பேற்று தனது 89 வயது வரை நிஜ ராஜாவாகவே வாழ்ந்தார். பொதுவாக ராஜா பொறுப்பேற்பவர்கள் வாள்வீச்சு, குதிரையேற்றம், கத்திச் சண்டை போன்றவற்றைக் கற்கவேண்டும் என்பது நியதி. ஆனால், முருகதாஸ் தீர்த்தபதிக்கு அதில் ஆர்வம் கிடையாது. டென்னிஸ், கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிலம்பம் சுற்றுதல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டினார். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ராஜாவுக்கு ஆர்வம் அதிகம். நல்ல பேச்சாளரும்கூட.

முருகதாஸ் தீர்த்தபதியின் தந்தை சென்னையில் ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொண்டார். லண்டனில் நடைபெற்ற அந்த வழக்குச் செலவுக்காக ஏராளமான நிலத்தை விற்றிருக்கிறார்கள். அப்படி அவர்கள் விற்ற நிலம்தான் மாஞ்சோலை எஸ்டேட்.

 டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி
டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி

‘1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அவரது நிலத்தின் பெரும்பகுதி கையை விட்டுச் சென்றது. அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டம் மூலம் எஞ்சிய நிலங்களும் அவரிடமிருந்து சென்றன. இவை தவிர ஏராளமான நிலத்தைப் பிறருக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முருகதாஸ் தீர்த்தபதி, புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் உட்பட எட்டுக் கோயில்களில் பரம்பரை அறங்காவலர். இந்தக் கோயில் விழா நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜா உடை அணிந்து மக்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். கடந்த 74 வருடங்களாக அவர் ராஜா உடையணிந்து காட்சி தந்திருக்கிறார்.

சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனை 5 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. அதன் கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் காரை பெயர்ந்து காட்சியளிக்கின்றன. நிறைய இடங்கள் பயன்பாட்டில் இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கின்றன. மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள், ஈட்டி, வீச்சரிவாள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மன்னரின் தர்பார் மண்டபம் வரவேற்பு அறையாகப் பயன்பாட்டில் இருக்கிறது.

விவேகானந்தரை வெளிநாட்டுக்கு அனுப்பி அவரது புகழை உலகம் அறிவதற்குக் காரணமாக இருந்த ராமநாதபுரம் ராஜாவான பாஸ்கர சேதுபதியின் பேத்திதான், முருகதாஸ் தீர்த்தபதியின் தாய். இப்போதும் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் ராமநாதபுரம் மன்னர் பரம்பரையினருக்குச் சொந்தமான சொத்துகள் இப்போதும் இருக்கின்றன.

சிங்கம்பட்டி ஜமீனுக்குப் பல பாரம்பர்யப் பெருமைகள் இருக்கின்றன. இந்தியாவில் முதன்முதலாக, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்து வீதிகளிலும் தாராளமாகச் செல்லலாம் எனத் திறந்து விட்டது சிங்கம்பட்டி ஜமீன்தான். முருகதாஸ் தீர்த்தபதியின் தாத்தா, பலத்த எதிர்ப்பையும் மீறி இந்தப் புரட்சியைச் செய்திருக்கிறார். அதை காந்தியடிகள் ‘யங் இந்தியா’ பத்திரிகையில், ‘மாடல் ஜமீன்தார்’ எனப் பாராட்டி எழுதியிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் 1972-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது, லூர்துநாதன் என்ற மாணவர் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். அந்தப் போராட்டம் குறித்து மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் சிங்கம்பட்டி ஜமீன்தாரும் ஒருவர் என்று பழைய மாணவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

“1983-ல் ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு இருந்தது. அக்காலகட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் அமைக்க முருகதாஸ் தீர்த்தபதி முன்வந்திருக்கிறார். அந்த அளவுக்கு ஈழப் போராட்டத்திலும் அவர் கவனம் கொண்டிருந்தார்” என்கிறார், புலிகளுடன் அப்போது நெருக்கமாக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

முருகதாஸ் தீர்த்தபதி மறைவால் தமிழகத்தின் கடைசி ராஜ பரம்பரை நிறைவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அவரால் நில உரிமையாளர்களாக மாறியிருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினரின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.