Published:Updated:

`சொத்தை அபகரிச்சுட்டு, என் மகன் என்னையே வீட்டைவிட்டு அனுப்பிட்டான்யா’ - ஆட்சியரிடம் உருகிய தாய்

``என்னை ஏமாற்றி சொத்துகளை அபகரிச்சதோட, வீட்டைவிட்டும் வெளியே அனுப்பிட்டான் என் மகன். தள்ளாத வயசுல இப்போ சாப்பாட்டுக்கும் வழியில்லை. மருந்து, மாத்திரை வாங்குறதுக்கும் முடியலை” என 77 வயதான தாய் ஆட்சியரிடம் கண்ணீர்மல்க மனு அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி, ஆதிபராசக்திநகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மனைவி மோட்சம். இவருக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் உள்ளனர். இவரின் கணவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், இவரின் மகன் ராமராஜ், மோட்சத்தின் சொத்துகளை அபகரித்துக்கொண்டு அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மோட்சம்
மகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மோட்சம்

இந்த நிலையில், மகனிடமிருந்து தனது சொத்துகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மோட்சத்தை அவரின் மகள் ஈஸ்வரி, பைக்கில் அழைத்து வந்திருந்தார். சுயமாக நடக்க இயலாத நிலையில், தன் மகள் உதவியுடன் மெதுவாக நடந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். மோட்சத்திடம் பேசினோம். ``17 வருசத்துக்கு முன்னாலயே என் கணவர் உடல்நலக்குறைவால இறந்துபோயிட்டாங்க.

அவர் இறந்ததுக்குப் பிறகு அவர் பேருல இருக்குற சொத்துகளை எம் பேருக்கு மாத்தினாங்க. என் பேருக்கு மாத்தினப்பவவே எம் பேருக்கு வேண்டாம். அதை ஆறு பங்காவெச்சு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்திடலாம்னு சொன்னேன். ’நீங்க இருக்குற வரைக்கும் எங்களுக்கு எந்தச் சொத்தும் தேவையிலம்மா’ன்னு பெண் பிள்ளைகள் பெருந்தன்மையாச் சொன்னாங்க. ஆனா, எம் பேருல சொத்துகளை மாத்தினது எம் மகனுக்குத் தெரியாது.

மகளுடன் மனு அளிக்கச் சென்ற மோட்சம்
மகளுடன் மனு அளிக்கச் சென்ற மோட்சம்

கணவர் இறந்ததுக்குப் பிறகு என் மகன்தான் என்னைக் கவனிச்சுக்கிட்டான். சொத்துகளை என் பேருல மாத்தினது தெரிஞ்ச பிறகு, பேரன், பிள்ளைகளைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றி எம் பேருல உள்ள சொத்துகளை அவன் பேருக்கு மாத்திக்கிட்டான். சரி போகட்டும்னு பார்த்தா, ஒரு கட்டத்துல என்னையே வீட்டைவிட்டு வெளியே அனுப்பிட்டான்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு வயசு 77 ஆகுது. என்னால சுயமா நடக்கக்கூட முடியாது. உடல்நிலையும் சரியில்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை. மருந்து, மாத்திரை வாங்குறதுக்கும் முடியலை. இந்த நிலைமையில, நான் இப்போ அனாதையா ஆகிட்டேன். என்னோட கடைசி மகள்தான் இப்போதைக்கு என்னை கவனிச்சுக்கிறா. எத்தனை நாளுக்குத்தான் மகளோட வீட்டுல இருக்க முடியும்? முடியாத காலத்துல ஒரு பெத்த தாயை இப்படி அலையவிடலாமா?

மனு அளிக்க வந்த மோட்சம்
மனு அளிக்க வந்த மோட்சம்

என்னால தாங்கிக்க முடியலை. ’பெத்த மனசு பித்து, பிள்ளை மனம் கல்லு’ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த நிலையிலும் மகனோட ஆதரவைத்தான் என் மனசு விரும்புது. ஆனா, என் மகன் வீட்டுக்குள்ள என்னை அனுமதிக்கலை. என்னை ஏமாற்றி அபகரிச்சுக்கிட்ட சொத்துகளைத் திரும்ப மீட்டுத்தர கலெக்டர் ஐயாதான் நடவடிக்கை எடுக்கணும்” என்றார் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு