Published:Updated:

புதுவை - விழுப்புரம்: 15 நாள்களில் 4 மடங்கு அதிகரித்த மதுபான கடத்தல்! உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியா?

புதுவையிலிருந்து விழுப்புரத்துக்குக் கடத்திவரப்படும் மதுபானங்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு 28 நாள்கள் முன்பு பிடிபட்ட எண்ணிக்கையைப்போல தேர்தல் தேதி அறிவித்த 15 நாள்களில் பிடிபடுவது 4 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று (06.10.2021) காலை முதல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மீதமுள்ள ஆறு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் திடீர் திருத்தம்?! - அதிர்ச்சியில் ஈச்சங்குப்பம் மக்கள்

பொதுவாகவே, உள்ளாட்சித் தேர்தல் என்றால் பணத்துக்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. அதேபோல மதுப் பிரியர்களின் வாக்குகளைக் கவர்ந்து இழுப்பதற்கு சில வேட்பாளர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் முக்கியமானது ஓட்டுக்கு மதுபானம் கொடுப்பது. தமிழக மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதாலும், விழுப்புரத்துக்கு அருகிலேயே உள்ள புதுவை மாநிலத்தில் குறைந்த விலையில் அரசு மதுபானங்கள் (பாப்ஸ்கோ) கிடைக்கும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான மதுபானங்களைப் புதுவையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் இறக்கும் பணிகள் ஜோராக நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படிப் புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு மறைமுகமாகக் கடத்திவரப்படும் பாப்ஸ்கோ மதுபானங்கள் பிடிபடுவது உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர் அதிகரித்துள்ளது.

மதுபானம் கடத்தல்
மதுபானம் கடத்தல்

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பிறகு இருசக்கர வாகனங்கள், கார், மினி லாரி, டிராக்டரின் பின்புறப் பெட்டி எனப் பல வழிகளில் மதுபானம் மறைத்துக் கொண்டுவரப்படும்போது பிடிபடும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல கள்ளச்சாராயம் பிடிபடுவதும் அதிகரித்துள்ளது. சரியாகச் சொல்லப்போனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக 28 நாள்களில் (15.08.2021 - 13.09.2021) மட்டும் தமிழக கள்ளச்சாராயம் 2,001 லிட்டரும், புதுவையைச் சேர்ந்த மில்லி சாராயம் 257 லிட்டரும், உள்ளூர் மற்றும் கலால் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது விழுப்புரம் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அடுத்த 15 தினங்களிலேயே மீண்டும் அந்த எண்ணிக்கை ஈடாகிவிட்டது எனலாம். 14.09.2021 - 29.09.2021 வரை சரியாக 15 நாள்களில் மட்டுமே... தமிழ்நாடு கள்ளச்சாராயம் 2,340 லிட்டரும், புதுவையைச் சேர்ந்த மில்லி சாராயம் 218 லிட்டரும் சோதனையில் பிடிபட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

இவை ஒருபுறமிருந்தாலும், புதுவையிலிருந்து விழுப்புரத்துக்குக் கடத்திவரப்பட்ட பாப்ஸ்கோ மதுபானங்கள், கடந்த 28 நாள்களில் பிடிபட்டதை ஒப்பிடும்போது... உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பி்றகு நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முந்தைய 28 நாள்களில் 1,346 லிட்டர் புதுவை பாப்ஸ்கோ மதுபானங்களே சோதனையின்போது பிடிபட்டுள்ளன. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 15 நாள்களில் மட்டும் 5,828 லிட்டர் புதுவை பாப்ஸ்கோ மதுபானங்கள் பிடிபட்டுள்ளன. அதுமட்டுமின்றி கர்நாடகத்தைச் சேர்ந்த அரசு மதுபானம் 31.5 லிட்டரும் பிடிபட்டுள்ளது.

டிராக்டரில் மதுபானம் கடத்தல்
டிராக்டரில் மதுபானம் கடத்தல்

கடந்த மாதம் 28-ம் தேதி இரவு, கண்டமங்கலம் அருகே புதுவையிலிருந்து கடத்திவரப்பட்ட 7,200 மதுபாட்டில்கள் மொத்தமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பி்றகு அண்டை மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்திவருவது அதிகரித்திருக்கும் சம்பவம் வருத்தத்துக்குரிய ஒன்று. மக்களுக்கு சிறந்த தலைவனாகவும், சேவை மனப்பான்மையோடும் தேர்தலில் போட்டியிடவேண்டிய பதவிகளுக்கு, எதிர்கால லாப நோக்கத்துடன் சில வேட்பாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதை என்னவென்று சொல்வது..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர், அடுத்த 15 நாள்களில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களைக் கடத்திவரும் செயல்களில் 286 ஆண்களும், 53 பெண்களும் ஈடுபட்டுள்ளனர். அதில் பெரிய அளவில் கடத்தலில் ஈடுபட்ட 98 ஆண்களும், 39 பெண்களும் என மொத்தம் 137 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள்மீது வழக்கு பதியப்பட்டு பெயில் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 29 இருசக்கர வாகனங்களும், 15 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபானம் கடத்தி வருவதற்கு டிராக்டர் பெட்டியில் செய்யப்பட்டிருந்த மாற்றம்.
மதுபானம் கடத்தி வருவதற்கு டிராக்டர் பெட்டியில் செய்யப்பட்டிருந்த மாற்றம்.

தடுப்பு நடவடிக்கை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்; அதேபோல கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், புதுவை ஆட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி-க்களுடன் புதுவையில் ஒன்றாகச் சந்தித்து கடந்த 30-ம் தேதி மீட்டிங் நடத்தியிருந்தனர். ``அதிக எண்ணிக்கையிலான மதுபானங்களை மொத்த எண்ணிக்கையில் கேட்பவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம்" என்று ஆலோசித்திருக்கிறார்கள். 30-ம் தேதிக்கு பிறகு மதுபானங்கள் கடத்திவரப்படும் எண்ணிக்கை குறைந்திருக்கிறது" என்றார்.

ரூ. 236 கோடி பணம்; 2.90 லட்சம் லிட்டர் மதுபானம் - தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், நான்கு மடங்கு அதிகமான மதுபானங்கள் சோதனைகளில் பிடிபட்டிருந்தாலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாவட்டத்துக்குள் சிலர் மதுவைக் கொண்டுவந்ததாகவும் சொல்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு