Published:Updated:

`அங்கேயே அப்பா உயிரு போயிடுச்சு..!’ - காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தாரா பெட்டிக்கடை உரிமையாளர்?!

விசாரணையில் காவல்துறை
News
விசாரணையில் காவல்துறை

டாஸ்மாக் அருகே பெட்டிக்கடை நடத்திவந்த நபர், போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல்துறை அதை மறுத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன். 60 வயதைக் கடந்த இந்த நபர், அதே ஊரில் எல்லைப் பகுதியை ஒட்டியபடி அமைந்துள்ள மதுபானக்கடை (TASMAC) அருகே சுண்டல் விற்பனை செய்யும் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவந்திருக்கிறார். டாஸ்மாக் அருகிலேயே பெட்டிக்கடை வைத்திருந்ததற்காக எச்சரிக்கைவிடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகள், உலகநாதனைத் தாக்கியதாகவும் அதனால் அதே இடத்தில் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருடைய உறவினர்கள் நியாயம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

உயிரிழந்த உலகநாதன்
உயிரிழந்த உலகநாதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த உலகநாதனின் மகன் தனபால் என்பவரிடம் பேசினோம். ``நாங்க சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவங்க. வடகரை தாழனூர் எல்லைப் பகுதியில் ஒரு ஒயின்ஷாப் அமைந்துள்ளது. அங்குதான் எங்களின் நிலமும் இருக்கிறது. அந்த இடத்துல கீற்றுக் கொட்டகை மாதிரி அமைச்சு எங்க அப்பா, அம்மா சுண்டல் கடை போட்டிருந்தாங்க. இன்னிக்கு (நேற்று, 05.12.2021) மதியம் 3 மணி வாக்குல அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்லருந்து நாலு போலீஸ்காரங்க அங்க வந்திருக்காங்க. "இங்க கடையெல்லாம் வெக்கக் கூடாது"னு சொல்லி எங்க அம்மாவை அடிக்கிறதுக்கு பெண் போலீஸ் ஒருத்தவங்க கை ஓங்கியிருக்காங்க. அதை எங்க அம்மா தடுத்திருக்காங்க. "ஏங்க வயசானவளை அடிக்கிறீங்க" அப்படின்னு எங்க அப்பா கேட்டதுக்கு... பக்கத்துல இருந்த போலீஸ் ஒருத்தரு, கையிலவெச்சிருந்த லட்டியால அப்பாவின் நெஞ்சுலயே குத்தியிருக்காரு. அங்கேயே முடிஞ்சிடுச்சு சார்... என் அப்பா உயிர் போயிடுச்சு!

வந்த போலீஸ்காரங்க பெயர் எதுவும் எனக்குத் தெரியலை. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க அழைச்சுக்கிட்டு வந்தோம். டாக்டர், அப்பாவைப் பார்த்துட்டு 'இறந்துட்டாங்க' அப்படின்னு சொல்லிட்டாரு. போலீஸ் உயரதிகாரிகள் சிலர் வந்து விசாரிச்சுட்டுப் போயிருக்காங்க. ஒரு நியாயமும் எங்களுக்கு கிடைக்கலை. நாங்க இல்லாதப்பட்டவங்கங்கறதால யாரும் எதுவும் பண்ண மாட்டேங்கிறாங்க. அஙகே வந்திருந்த போலீஸ்காரங்ககிட்ட இது சம்பந்தமாக புகார் கொடுத்தோம், ஆனா அவங்க அதை வாங்கலை. அதனால, அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கே நேராகப் போய் புகார் கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றார் கலங்கிய குரலில். இந்நிலையில், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இருந்த உலகநாதனின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - ஸ்ரீநாதா
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - ஸ்ரீநாதா

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவைத் தொடர்புகொண்டு பேசினோம். "சுண்டல் போன்ற பொருள்களை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் அருகிலேயே அவர்கள் பெட்டிக்கடை மாதிரி வைத்து நடத்திவந்துள்ளனர். உலகநாதன் என்ற நபர்மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்கின்றன. 'அங்கு கூட்டமாக இருப்பார்கள்' என்ற பொதுமக்களின் புகார்களும் இருக்கின்றன. இதனால், காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று 'இந்த மாதிரி கடை வைக்கக் கூடாது' என எச்சரித்துள்ளனர். அப்போது வயதான அந்த நபர், மயங்கி விழுந்திருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் இருந்துள்ளன. ஆனால், போலீஸ் அடித்தனர் என்கிறார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. அவர்கள் அளித்த புகாரையும் வாங்கியிருக்கிறோம். அதைப் பதிவு செய்திருக்கிறோம்" என்றார்.