Published:Updated:

``எங்க உயிருக்கே ஆபத்தாக இருக்கு"- மருத்துவக்கழிவுகளால் துயரத்தில் திருவாரூர் கிராம மக்கள்

திருவாரூர் - மருத்துவக்கழிவுகள்

``எங்களால் நிம்மதியா ஒரு வாய் சோறுகூட சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு, இந்தக் கழிவுகளால் நாற்றம் அடிக்கும். இப்ப அந்த ஆஸ்பத்திரியால இப்படி ஒரு நிலைமை உருவாகும்னு நாங்க யாருமே கனவுலகூட நெனைக்கலை.” - கிராம மக்கள்.

``எங்க உயிருக்கே ஆபத்தாக இருக்கு"- மருத்துவக்கழிவுகளால் துயரத்தில் திருவாரூர் கிராம மக்கள்

``எங்களால் நிம்மதியா ஒரு வாய் சோறுகூட சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு, இந்தக் கழிவுகளால் நாற்றம் அடிக்கும். இப்ப அந்த ஆஸ்பத்திரியால இப்படி ஒரு நிலைமை உருவாகும்னு நாங்க யாருமே கனவுலகூட நெனைக்கலை.” - கிராம மக்கள்.

Published:Updated:
திருவாரூர் - மருத்துவக்கழிவுகள்

திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியில் அமைந்துள்ளது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திறந்துவைத்தார். ஏறக்குறைய 500 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டலை என்னும் கிராமத்தில் திறந்தவெளியில் கொட்டப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

மருத்துவக்கழிவுகள்
மருத்துவக்கழிவுகள்

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தோம். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்பட்ட ஊசிகள், சிரிஞ்ஜுகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள் போன்ற மருத்துவக்கழிவுகளைத் தண்டலை கிராமத்தில்தான் சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனை நிர்வாகம் கொட்டிவருவதாகவும், இதனால் தங்கள் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர் தண்டலை கிராமப் பகுதி மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்துப் பேசிய தண்டலை கிராம மக்கள் சிலர், ``பல தலைமுறையா இந்த கிராமத்துலதான் வாழ்ந்திட்டுருக்கோம். கிட்டத்தட்ட 2,000 குடும்பங்கள் இந்த கிராமத்துல இருக்காங்க. கடந்த ஒரு வருசமா திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியோட மருத்துவக்கழிவுகளையெல்லாம் எங்க ஊர்ல வந்துதான் கொட்டுறாங்க. இந்தக்கழிவுகளால எங்க உயிருக்கே ஆபத்து இருக்கு. திருவாரூர் ஆஸ்பத்திரியில நோயாளிக்குப் பயன்படுத்தின ஊசி, சிரிஞ்ச், குளூக்கோஸ் பாட்டில்கள், டாக்டருங்க கையிலை மாட்டுற உறை அப்புடின்னு பல மாதிரியான கழிவுகளும் இந்தக் குப்பமேட்டில் கெடக்குது. சில நேரத்துல ரத்தக்கறையோட உள்ள பஞ்சு, ரத்த டெஸ்ட் எடுக்கப் பயன்படுத்தின பொருள்களெல்லாம் இங்கே கெடக்கும்.

மருத்துவக்கழிவுகள்
மருத்துவக்கழிவுகள்

அதையெல்லாம் பார்க்கவே ரொம்ப அருவருப்பாவும் பயமாவும் இருக்கும். நேரம் ஆக ஆக அந்த வாடை எங்க ஊர் முழுக்க பரவிடும். இந்த ஆஸ்பத்திரிக் கழிவுகள்ல இருந்து வீசுற நாத்தத்துனலா எங்க ஊர்ல பல பேருக்குத் தலைவலியும் சுவாசப் பிரச்னையும்கூட ஏற்பட்டிருக்கு. எங்களால நிம்மதியா ஒரு வாய் சோறுகூட சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு, இந்தக் கழிவுகளால நாற்றம் அடிக்கும். சில சமயத்துல இங்க குப்பை ரொம்ப அதிகமா சேர்ந்துட்டா யாராவது வந்து இந்த குப்பைய கொளுத்திட்டுப் போயிடுவாங்க. அப்போ பெரிய மலை அளவுக்குப் புகை எங்க ஊரையே சூழ்ந்திடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த சமயத்தில் நாங்க மூச்சுவிடுறதே கஷ்டமா இருக்கும். சின்னச் சின்னப் பசங்களெல்லாம் ரொம்ப சிரமப்படுவாங்க. இந்த மருத்துவக்கழிவால நாங்க தெனம் தெனம் செத்துப் பொழச்சுதான் இந்த ஊர்ல வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம். 12 வருஷத்துக்கு முன்னாடி கலைஞர் ஐயாவால எங்க ஊர்ல ஆஸ்பத்திரி வந்தப்போ நாங்க எல்லாரும் ரொம்ப பெருமைப்பட்டோம். ஆனா, இப்ப அந்த ஆஸ்பத்திரியாலேயே நாங்க சாவுற நிலமை உருவாகும்னு நாங்க யாருமே கனவுலகூட நெனைக்கலை. எவ்வளவோ முறை சொல்லியும் அதிகாரிங்க யாருமே நடவடிக்கை எடுக்கறதில்லை. தமிழக முதல்வர்தான் எங்க பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வா இந்த ஆஸ்பத்திரிக் கழிவுகளை இங்கே கொட்டாம அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் வேதனையோடு.

மருத்துவக்கழிவுகள்
மருத்துவக்கழிவுகள்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தண்டலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், ``நான் இந்த கிராமத்துல 15 வருஷமா விவசாயம் பண்ணிட்டுவருகிறேன். இந்த ஆஸ்பத்திரி குப்பைகளை எங்க ஊர்ல கொட்டுறதுனால எங்க உயிருக்கே ரொம்ப ஆபத்தா இருக்குது. இந்த கிராமத்தில் இருக்கிற ஆடு, மாடெல்லாம் அந்தக் குப்பைமேட்டில் போய்தான் மேயுது..! அப்போ அந்தக் குப்பையில் கெடக்கிற பழைய ஊசி, சிரிஞ்சு மாதிரியான பொருள்கள், மாட்டுடைய காலில் குத்திப் பெரிய புண்ணாகிடுது. அதுக்குப் பிறகு அந்த மாடு நடக்கவே ரொம்பக் கஷ்டப்படும். இதனால, சில மாடு செத்துகூடப் போயிருக்கு. அந்த ஆஸ்பத்திரி குப்பையிலிருந்து ரத்த வாடை அடிக்கிறதுனால நாய்களெல்லாம் அந்தக் குப்பையைக் கிளறி ரத்தகறை படிஞ்ச பொருள்களையெல்லாம் இழுத்துக்கிட்டு வந்து எங்க வீடுகளுக்குப் பக்கத்தில் போட்டுடுது. பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகளான அந்தப் பொருளையெல்லாம் பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு. தயவுசெய்து அரசாங்கம் இந்தக் குப்பைகளை எங்கள் கிராமத்தில் கொட்டாமல் வேறு எங்காவது கொட்ட வேண்டும்" என்கிறார் அவர்.

இந்த விவகாரம் குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜாவிடம் நேரில் சென்று கேட்ட போது, ``திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். தினமும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவக்கழிவுகளை தரம் பிரித்து அள்ளிச் செல்வார்கள். அவர்கள் அந்தக் குப்பைகளை எங்கு சென்று வீசுகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட, திருவாரூர் அரசுப் பொது மருத்துவமனையாலேயே அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கலங்குகிறார்கள் மக்கள். அதோடு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism