Published:Updated:

``என் ஆட்டைக் கண்டுபிடிச்சுக் குடுங்க சார்" - 200 அடி உயர மின்கோபுரத்தில் ஏறியவரால் பரபரப்பு!

மின்கோபுரத்தில் படுத்திருக்கும் சிவக்குமார்
மின்கோபுரத்தில் படுத்திருக்கும் சிவக்குமார்

ஆடு தொலைந்ததில் இருந்து மீளாத சிவக்குமார் மதுபோதையில் நேற்று காலையிலிருந்து வீட்டில் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள கோப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவர் தனது தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வருவதோடு, விவசாயக் கூலி வேலைகளுக்கும் செல்வார். கடந்த வாரம் இவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்று காணாமல் போயிருக்கிறது. "சாமிக்கு நேந்து விட்ட ஆட்டை இப்படி களவாண்டுட்டு போயிட்டாய்ங்களே!" என சிவக்குமார் கடந்த சில நாள்களாகப் புலம்பி வந்துள்ளார். "போலீஸ்ல போய் புகார் கொடுக்கலாம்" என வீட்டிலிருந்தவர்கள் சொல்ல "சாமியோட ஆட்டை திருடிட்டு போனவனுக்கு சாமியே தக்க கூலியைக் கொடுத்துடும்" எனக் கூறியுள்ளார். இருந்தும் ஆடு தொலைந்ததில் இருந்து மீளாத சிவக்குமார் மதுபோதையில் நேற்று காலையிலிருந்து வீட்டில் கத்திக்கொண்டே இருந்துள்ளார். திடீரென பிற்பகல் 3 மணியளவில் 'நான் சுடுகாட்டுல போய் படுத்துக்குறேன்' எனச் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பியவர், ஊருக்கு வெளியே சுடுகாட்டை ஒட்டியிருந்த 220 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி நின்றிருக்கிறார்.

மின்கோபுரத்தில் சிவக்குமார்
மின்கோபுரத்தில் சிவக்குமார்

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக புஞ்சைப்புளியம்பட்டி போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் நம்பியூர் தீயணைப்புத் துறையினர் மின் கம்பத்தின்மீது ஏறி நின்றுகொண்டிருந்த சிவக்குமாரிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். "தொலைஞ்சு போன என்னோட ஆட்டுக்கு எஃப்.ஐ.ஆர் போட்டு கண்டுபிடிச்சிக் கொடுங்க" என சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார். ஒரு கட்டத்தில் டவர் கம்பியில் படுத்துத் தூங்கியுள்ளார். தீயணைப்புத் துறையினர் டவர் மேல் ஏற, "நீங்க மேல ஏறி வந்தா நான் கீழ குதிச்சிடுவேன்" என சிவக்குமர் மிரட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக சமாதானம் செய்து அதிகாரிகள் சிவக்குமாரை கீழே இறங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம்: `15 நாள்ல கொரோனாவை அழிச்சுக் காட்டுறேன்!’ - 200 அடி டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

என்ன பிரச்னை என விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். "சிவக்குமாரோட வெள்ளாட்டை யாரோ திருடிட்டு போயிருக்காங்க. சாமி ஆட்டை தூக்கிட்டுப் போனவனுக்கு சாமி தண்டனை கொடுக்கும். திருடிட்டு போனவன் திருப்பிக் கொண்டு வந்து ஆட்டை கொடுத்துடுவான்னு இருந்துருக்காரு. ஆனா, எதுவும் நடக்கலை. என்ன நினைச்சாரோ ஃபுல் போதையில இருந்தவரு ஊருக்கு வெளிய சுடுகாடு பக்கத்துல இருந்த மின்கோபுரத்துல ஏறிட்டாரு. கரண்ட் கம்பம் ஏறுற வேலைக்கு அப்பப்ப சிவக்குமார் போவராம். அந்த அனுபவத்துல கடகடன்னு மேல ஏறிட்டாரு. மின்கோபுரம் மேல ஏறுனவரை கீழ இறக்க எவ்வளவோ முயற்சி பண்ணிணோம். அந்த மின்கோபுரத்துக்கு வந்த பவர் கனெக்‌ஷனை தேடிக் கண்டுபிடிச்சி ஆஃப் பண்ண 10 நிமிஷம் ஆச்சு. இல்லைன்னா ஆள் காலி ஆகியிருப்பாரு. அவரை சமாதானப்படுத்த பக்கத்து தோட்டத்துல இருந்த ஆட்டை தூக்கிட்டு வந்து காட்டுனோம். "இது என் ஆடு இல்லை. எனக்கு என் ஆடு தான் வேணும்ன்னு" சொன்னாரு. ஒருவழியா போராடி கீழ இறக்கிட்டோம். கீழ வந்தவரு "5 வருஷத்துக்கு முன்னாடி இதேமாதிரி ஒருதடவை என்னோட ஆடு ஒன்னு தொலைஞ்சு போச்சு. அதுக்கு உங்க ஸ்டேஷன்ல வந்து புகார் கொடுத்தோம். அப்ப அங்கிருந்த போலீஸ் ஒருத்தரு "ஏன்யா ஊர்ல ஆயிரம் பேரு ஆடு வளர்க்குறான். எல்லாத்தும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா"ன்னு கேட்டாரு. அதை நான் இன்னும் மறக்கலை. ஏற்கனவே போலீஸ் அப்படி சொன்ன பின்னாடி நான் எப்படி மறுபடியும் போலீஸ்ல புகார் கொடுப்பேன்னு" சொன்னாரு. சரி பத்திரமா வீட்டுக்குப் போங்க. ஆட்டை கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லி அனுப்பியிருக்கோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு