Published:Updated:

``கருணாஸ் மட்டுமே வந்து சென்றார்!” - கலாம் நினைவு நாளை மறந்த ஆட்சியாளர்கள்

நினைவிடத்தில் உள்ள கலாமின் வெண்கலச் சிலை.
நினைவிடத்தில் உள்ள கலாமின் வெண்கலச் சிலை.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவர்கள் தங்கள் கனவு நாயகன் கலாமுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர். ஆனால், எல்லாவற்றிலும் போட்டி போட்டுக்கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்களோ, ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களோ கலாமின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வரவில்லை.

தனது வியக்கத்தகு கண்டுபிடிப்புகளால் இந்திய விண்வெளித் துறையை உலக வல்லரசு நாடுகளால் உற்று நோக்க வைத்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் கலாமை மறக்கத் தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள்.

அப்துல்கலாம் நினைவிடம்
அப்துல்கலாம் நினைவிடம்

ராமேஸ்வரம் தீவில் பிறந்து, விஞ்ஞானியாக நாட்டின் விண்வெளி துறையில் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளைத் தந்தவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். ஜனாதிபதி பதவியில் இருந்தபோதும், அதற்குப் பின்னரும் மக்களுடனும் மாணவர்களுடனும் நெருக்கத்தை கைவிடாமல் தொடர்ந்தவர். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி, மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்ட அவரது உடல் லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தேசிய நினைவகம் உருவாக்கப்பட்டது. 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த நினைவகத்தைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கலாம் நினைவிடத்தில் உறுதி ஏற்ற மாணவர்கள்
கலாம் நினைவிடத்தில் உறுதி ஏற்ற மாணவர்கள்

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கலாம் நினைவிடத்துக்கு 68 லட்சம் பேர் வருகை தந்து அஞ்சலி செலுத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் தேதி அன்று டாக்டர் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவர்கள் தங்கள் கனவு நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துச் சென்றனர்.

ஆனால், எல்லாவற்றிலும் போட்டி போட்டுக்கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் கலாமின் நினைவு நாளை புறக்கணித்திருப்பது, அவரை வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை வேதனையடையச் செய்துள்ளது. ஒரு அமைச்சர்கூட கலாமுக்கு மரியாதை செலுத்த பேக்கரும்பு நினைவிடத்துக்கு வரவில்லை.

கலாம் முகத்துடன் மாணவிகள்
கலாம் முகத்துடன் மாணவிகள்
உ.பாண்டி

குறைந்தபட்சம் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் அமைச்சர் மணிகண்டன்கூட இந்த நினைவு தினத்தில் பங்கெடுக்கவில்லை.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம் இப்படியென்றால் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் தங்களது பிரதிநிதிகளை கலாம் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த அனுப்பி வைக்கவில்லை. விதிவிலக்காக திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், அ.ம.மு.க-வின் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த், பா.ஜ.க-வின் மாவட்ட நிர்வாகி முரளிதரன் உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே கலாமின் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கருணாஸ்
கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கருணாஸ்

இந்தியாவை வல்லரசுகளுக்கு நிகராக உயர்த்திக்காட்டிய அப்துல்கலாமின் நினைவினை போற்றும் வகையில் நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என ஒன்றுகூடி மரியாதை செலுத்திய நிலையில், ஒரு வட்டச் செயலாளருக்குக் கொடுக்கும் மரியாதையைக்கூட கொடுக்காமல் அரசியல் கட்சிகள் கலாமின் நினைவு தினத்தைப் புறக்கணித்திருப்பது, அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது. இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளின்போது கலாமுக்கு உரிய மரியாதை செலுத்த ஆட்சியாளர்களும் அரசியல் கட்சி நிர்வாகிகளும் முன்வர வேண்டும் என பொதுமக்கள் பலர் தங்களின் வேதனையை வெளிபடுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு