Published:Updated:

`90 சதவிகித ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு!’ -கொரோனா அச்சத்தால் திணறும் தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்

கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், துறைமுகத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றிச்செல்வதும், பிற மாநில லாரிகள் தமிழகத்திற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது போல, துறைமுகங்களிலும் சரக்குக்கப்பல்களின் ஏற்றுமதி, இறக்குமதி தடையால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மொத்தம் 15 சரக்குக்கப்பல் தளங்கள் உள்ளன.

சரக்குகள் இறங்குத்தளம்
சரக்குகள் இறங்குத்தளம்

இந்தத் தளங்களில் எப்போதுமே சரக்குக்கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்குமதி, ஏற்றுமதியாகிக்கொண்டிருக்கும். இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து இத்துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் மாலுமிகள், ஊழியர்களுக்கு கொரானா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுவதுடன், மாலுமிகள் யாரும் கப்பலை விட்டு கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால், 2 முதல் 3 நாள்கள் வரை இறங்குதளம் கிடைக்காமல் காத்திருக்கும் நிலையே இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது 9 தளங்களில் மட்டுமே சரக்குகள் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதில், 4 தளங்களில் இறக்குமதிதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலக்கரியும் பாரதீப், ஹல்டியா உள்ளிட்ட இந்தியத் துறைமுகங்களில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

தேக்க நிலையில் மரத்தடிகள்
தேக்க நிலையில் மரத்தடிகள்

இதேபோல, காகிதக்கழிவுகள், முந்திரிக்கொட்டைகள், பருப்பு வகைகள், பர்னஸ் ஆயில், பாமாயில், இயந்திரத் தளவாடங்கள் எனப் பல்வேறு சரக்குகளின் பரிவர்த்தனை குறைந்துள்ளது. இந்தோனேஷியா, தென் அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தேக்கு, போங்க்ரா, பைன் வுட், பாப்புலர் உட் போன்ற பல்வேறு வகை மரத்தடிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

சரக்குப்பெட்டகங்கள் மூலமும், பல்க் கப்பல்கள் மூலமும் மரத்தடிகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் கொண்டுசெல்லப்படும். இதில், கப்பலில் இருந்து இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்கள், அதைச்சார்ந்த தொழிலாளர்கள், டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள், உள்நாட்டு மரத்தடி வியாபாரிகள் எனப் பல தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும்.

சரக்குக் கப்பல்
சரக்குக் கப்பல்

தற்போது, கொரோனா எச்சரிக்கை காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி என 90 சதவிகித சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்கள். இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மரத்தடிகள் இறக்குமதியாளரான பரமசிவனிடம் பேசினோம், “இந்தியத் துறைமுகங்களில் தூத்துக்குடி துறைமுகத்தில்தான் மரத்தடிகள் அதிகமாகக் கையாளப்படுகின்றன. தினமும் 300 முதல் 600 சரக்குப்பெட்டகங்கள் வரை மரத்தடிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஒரு மாதமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 சரக்குபெட்டகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு கட்டுமானபணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பைன்வுட் மரத்தடிகள் இறக்குமதி இல்லாததால் இயந்திர தளவாடங்கள் பேக்கிங்கும், பாப்புலர் வுட் இறக்குமதி இல்லாததால் தீப்பெட்டி தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இறங்குத்தளம்
இறங்குத்தளம்

வழக்கமாக துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல்கள், இறங்கு தளங்களில் சரக்கு பரிவர்த்னையில் ஈடுபட்டுள்ள கப்பல்கள், இறங்குதளம் கிடைக்காமல் நடுக்கடலில் காத்திருக்கும் கப்பல்கள், அடுத்துவரும் நாட்களில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் குறித்து தினமும் துறைமுக இணையதளத்தில் அப்டேட் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கொரானா எச்சரிக்கைக்குப் பின்னர் இது குறித்த விவரங்கள் சரிவர அப்டேட் செய்யப்படவில்லை.

இதேபோல் தூத்துக்குடியில் இருந்து ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் கடல் உணவுகளில், கடந்த ஒரு மாதத்திற்குள் ஏற்றுமதி செய்யப்பட்ட கடல்மீன் உணவுகள் கொரோனா அச்சுறுத்தலால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது என கவலையுடன் கூறுகிறார்கள் கடல்மீன் உணவு ஏற்றுமதியாளர்கள்.

தேக்கத்தில் கண்டெய்னர்கள்
தேக்கத்தில் கண்டெய்னர்கள்

இதற்கிடையில் தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தோணிகள், பார்ஜ்கள் மூலம் தினமும் கொண்டு செல்லப்படும் மணல், சல்லி, கருங்கல், காய்கறிகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானிய வகைகள் உள்ளிட்டவைகளின் வர்த்தகம், கடந்த ஒரு வாரத்தில் கடுமையாகக் குறைந்துள்ளது. பல்வேறு தோணிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புதிய, பழைய துறைமுகங்களை மட்டுமில்லாமல் துறைமுகத்தை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு