Published:Updated:

`ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள்!’ -உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்

நிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்
நிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 2,600 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும், நலிந்த தொழிலாளர்களுக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கி உதவி வருகிறார்கள். காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து இளநீர், பழச்சாறு, காலை உணவு வழங்குகிறார்கள். ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 20,000 குடும்பங்களுக்கு மேல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர் சோளிங்கரில் மேலும் 2,600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர்.

நிவாரணப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்றதினர்
நிவாரணப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்றதினர்

சோளிங்கர் வாசவி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், நாகஸ்வரம் தவில் கலைஞர்கள், கிராமிய நாடகக் கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள், லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலின் டோலித் தொழிலாளர்கள், மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர். முன்னதாக, நிவாரணப் பொருள்களைப் பெற வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்து கைகளை சுத்தமாகக் கழுவச் செய்தனர்.

பின்னர், முகக் கவசம் அணியச் செய்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பிரமாண்ட அரங்கில் அமர வைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி செய்திருந்தார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கிப் பேசிய மாவட்டச் செயலாளர் ரவி, ``ஊரடங்கால் அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தலைவர் ரஜினிகாந்த்தின் வழிகாட்டுதலின்படி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறோம். சிறு வியாபாரியான நானும் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

நிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்
நிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்

இந்த நேரத்தில் ஏழை மக்களின் வலியை உணர்கிறேன். ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு. எனவே, வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியுடனும் இருங்கள். நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

நிவாரணப் பொருள்களைப் பெற்ற ஏழைத் தொழிலாளர்கள், ``ஆளுங்கட்சிக்காரங்களும் கண்டுக்கல. எதிர்க்கட்சிக்காரங்களும் பெருசா எந்த உதவியையும் செய்யல. ரஜினி மக்கள் மன்றத்தினர் மட்டும்தான் தேடி வந்து உதவி செய்றீங்க...’’ என்று கூறினர். ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்களை ஆசுவாசப்படுத்தி சந்தோஷமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு