கடலூர் மாவட்டம், புதுநகர் நத்தவெளி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (27). இவர் கடலூரில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்தார். அப்போது கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தான் திருணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்தில் ரம்யா தன் பெற்றோர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது, அனைவரையும் சோகத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது.

அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ரம்யாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால்தான் ரம்யா தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி பரவியது. திருமணத்துக்குப் பிறகுதான் கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லாதது ரம்யாவுக்குத் தெரியவந்தது. இதனால் அவர் தன் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேறு வீடு பார்த்து அழைத்துச் செல்வதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஒரு மாதமாகியும் வீடு பார்த்து, அவரை அழைத்துச் செல்லவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில், தூக்கு போட்டுக்கொண்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை ஆய்வாளர் கவிதாவிடம் பேசினோம். ''ரம்யாவும் கார்த்திகேயனும் 7 வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் நன்றாகப் படித்துள்ளனர்.

இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காத்திருந்து திருமணம் செய்துள்ளனர்.
திருமணமும் நல்லபடியாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ரம்யா கணவரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு கழிவறை கட்டும் பணி நடைபெற்று வந்திருக்கிறது. கழிவறையை முழுமையாகக் கட்டி சரிசெய்த பிறகு இந்த வீட்டுக்கு அழைத்து வருவதாகவும், அதுவரை அவரது தாய் வீட்டில் இருக்கும்படியும் கார்த்திகேயன் ரம்யாவைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து, முழு விருப்பத்துடன்தான் தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ரம்யா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கழிவறை தொடர்பாக நடந்த விஷயம் இதுதான். இதற்கு பின்னால் வேறு ஒரு விஷயமும் இருக்கிறது. என்னவென்றால், ரம்யாவின் அப்பா இந்தக் காதல் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாலும், அவர் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தன் தந்தை தன்னிடம் சரியாகப் பேசாமல், அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பதாக அந்தப் பெண் புலம்பியபடி இருந்திருக்கிறார். தனது பிறந்த வீட்டில் தங்கி இருந்தபோதுதான் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
படித்த, பக்குவமான பெண்கள் யாரும், கழிவறை இல்லை என்பதற்காகவெல்லாம் தற்கொலை வரை செல்லமாட்டார்கள். இதற்குப் பின்னால் வேறு எதுவும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.