ஆதரவற்ற நிலையில், புழுக்கள் நெளியும் புண்ணுடன் இருந்த முதியவர் அருகில் செல்லக்கூட அனைவரும் தயங்கிய நிலையில், அவருக்கு முதலுதவி அளித்து அவரை மருத்துவமனையில் சேர்த்தார் அந்த ஆம்புலன்ஸ் பெண் ஊழியர். அவரை கௌரவிக்கும் பொருட்டு, பள்ளியின் சார்பாக அவரை அழைத்து கொடியேற்ற வைத்துள்ளனர். இதை அறிந்த பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள பாலம் அருகே வெகு நாள்களாக முதியவர் ஒருவர், ஆதரவற்ற நிலையில் காலில் அடிபட்டு கட்டுடன் இருந்துள்ளார். இதை அந்த வழியாகச் சென்ற சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் கவனித்து, உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸில் இருந்த அவசரக்கால மருத்துவ உதவியாளர் கிளாரா டெய்சி, முதியவரின் காலில் உள்ள கட்டை அவிழ்த்துப் பார்க்கையில், வெகுநாள்களாகக் கவனிக்கப்படாமல் இருந்த அந்தக் காயத்தில் இருந்து புழுக்கள் கொட்டியுள்ளன. மேலும், அதிக அளவிலான துர்நாற்றம் வீசியதால் அருகில் யாருமே நிற்கக்கூட இயலவில்லை.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் உதவியாளர் கிளாரா டெய்சி முகம் சுழிக்காமல், ஒற்றை ஆளாக முதியவரின் காயத்தில் மருந்திட்டு சுத்தம் செய்ததுடன், அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று, அனுமதித்துள்ளார். தற்போது சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ள அந்த முதியவர் நலமுடன் இருக்கிறார். அனைவரும் கைவிட்டு, தன் அருகில்கூட வராத நிலையில், மாறாத பொறுமையுடனும், கனிவுடனும் தனக்கு சிகிச்சை அளித்த கிளாரா டெய்சிக்கு முதியவர் நன்றி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் குறித்து பகிர்ந்த சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ``அந்த முதியவர் பாலத்துக்கு அடியில் யாருமே இல்லாத நிலையில் கைவிடப்பட்டு இருந்தார். அவருக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். ஆம்புலன்ஸின் அவசரக்கால மருத்துவ உதவியாளர் கிளாரா டெய்சி, சிறிதும் தயங்காமல் அது தன் கடமை என்ற உணர்வுடன், முதியவரின் நெடுநாளைய காயத்துக்கான முதலுதவி செய்ததுடன், அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று சேர்த்தார்.

அது அவரின் பணிதான் என்றாலும், இக்கட்டான சூழ்நிலையிலான இதுபோன்ற சேவைகளை, அதைச் செய்யும் ஊழியர்களைப் பாராட்ட வேண்டியது நம் கடமை என்று தோன்றியது. அது, அவரைப் போல சேவை செய்யும் மற்றவர்களையும் ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால், எங்கள் பள்ளியில் குடியரசு தினத்தன்று அவரை சிறப்பு அழைப்பாளராக கொடியேற்ற அழைத்தேன். இப்படி ஓர் ஊழியரை, மனுஷியை எங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நிறைவு எனக்குக் கிடைத்தது'' என்றார்.
கிளாரா டெய்சி, ``என் வேலையைத்தான் நான் செய்தேன். புண், புழு என இப்படி சருமம் சீழ்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டியது, நிபந்தனையற்ற நம் அன்பும் ஆதரவுமே. அதையே நான் செய்தேன். அதற்காகக் கொடியேற்றும் அங்கீகாரம் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என்றாலும், மாணவர்களின் முன் உதாரண மனுஷியாக நின்ற அந்தத் தருணம், இதுபோல் இன்னும் பல சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் கொடுத்தது'' என்றார்.
எளிய மனிதர்களின் வலிமையான செயல்களை அங்கீகரிப்போம்!