Published:Updated:

கோரிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்த தமிழக அரசு; நன்றி தெரிவித்த த.மு.எ.க.ச!

த.மு.எ.க.ச

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச) கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோரிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்த தமிழக அரசு; நன்றி தெரிவித்த த.மு.எ.க.ச!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச) கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
த.மு.எ.க.ச

சென்னை ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா பொது மண்டபத்தில்தான் 1897-ம் ஆண்டு முதன்முதலாகத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. பழுதடைந்த அவ்வரங்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை திரைத்துறையின் வரலாற்று அருங்காட்சியகமாகவும் திரைப்பட ஆவணக் காப்பகமாகவும் மாற்ற வேண்டும் என்று கலை இலக்கியம் சார்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச) ஒரு கோரிக்கையை வைத்திருந்தது.

அக்கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனமானது திரைப்படத் தயாரிப்பு, திரைப்படத் தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள், கலை உணர்வுகள் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும்.

விக்டோரியா பொதுமண்டபம்
விக்டோரியா பொதுமண்டபம்

இந்நிறுவனம், தமிழ்நாடு பாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இளங்கலை - காட்சிக்கலை (BACHELOR OF VISUAL ARTS) என்கின்ற நான்காண்டுக்கால பட்ட கல்வியினை பயிற்றுவித்து வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயன்பாட்டிலிருந்த பழம்பெரும் கருவிகளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைத்திடவும், பாடத்திட்டங்களைத் தரம் உயர்த்தி இந்நிறுவனத்தினை உலகத் தரத்திற்கு உயர்த்திட வல்லுநர் குழு அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் திரைப்படங்கள் மற்றும் திரைப்படத்துறையை மேம்படுத்த அனுபவமிக்க வர்த்தக நிறுவனங்கள், திரைப்பட பயிற்சி நிறுவனங்கள் நிறுவுதல், நிருவாகம் போன்றவற்றில் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், பிற திரைப்படத் தொழில்நுட்பப் பிரிவில் தனித்துவத்துடன் பணிபுரிந்து வரும் கலைஞர்களின் ஆலோசனைகள் மற்றும் இந்நிறுவனத்தில் பயன்பாட்டிலிருந்த பழம்பெரும் கருவிகளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைப்பதில் நிபுணத்துவமும், முன் அனுபவமும் பெற்ற வல்லுநர்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றை அரசு கோருகிறது.

த.மு.எ.க.ச கோரிக்கை
த.மு.எ.க.ச கோரிக்கை

விருப்பமுள்ளவர்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எழுத்து வடிவில் அறிக்கையாக "இணை இயக்குநர் (நி) / முதல்வர் (மூ.கூ.பொ) தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113" என்ற முகவரிக்கு 18.12.2022 அன்று மாலை 14.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தற்போது, த.மு.எ.க.ச-வின் கோரிக்கையை ஏற்று அவற்றைச்  செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் தமிழக அரசுக்குச் சங்க உறுப்பினர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.