Published:Updated:

மதுரை - போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: `17 கி.மீ தூரத்தை 10 நிமிடங்களில் கடந்த ரயில் என்ஜின்!'

மதுரை-போடி ரயில் பாதை
மதுரை-போடி ரயில் பாதை

மத்திய அரசு இப்பணிக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

மதுரை-போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2011-இல் தொடங்கின. தொடக்கத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் பணிகள் ஆமை வேகத்தில் நடத்தன. இதனால் பணியை வேகமாக முடிக்கக்கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய அரசு இப்பணிக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ரயில் சோதனை ஓட்டம்
ரயில் சோதனை ஓட்டம்

முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ஆவது கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இதற்கிடையே வைகை ஆற்றுப்பாலம், 30 சிறு பாலங்கள், ரயில்வே நிலையப் பணிகள் முடிக்கப்பட்டன. கடந்த மே மாதத்தில் முடிய வேண்டிய பணி, கொரோனா காரணமாக தாமதமாகியது. அண்மையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 4 -ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு ரயில்வே கட்டுமான இணைப் பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆண்டிபட்டி-தேனி இடையே உள்ள 17 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் ரயில் என்ஜின் வந்தடைந்தது.

’ஆண்டிப்பட்டி – தேனி’ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி; மகிழ்ச்சியில் தேனி மக்கள்!
ரயில் பாதை
ரயில் பாதை

தெற்கு ரயில்வே கட்டுமானப் பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் இந்தச் சோதனை ஒட்டம் நடைபெற்றது. அவரிடம் எப்போது மதுரை-போடி ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், "ஆண்டிபட்டி-தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும். தேர்தல் மற்றும் நிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தேனி-போடி இடையே நடக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் அதற்கான நிதி கிடைத்துவிட்டது. ஆகையால் தேனி-போடி இடையே ரயில் பாதை மற்றும் போடி ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இப்பணிகள் அனைத்தும் 2021 டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு