சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இரவு 7:15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயில், காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது. அதன்படி நேற்று சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இரவு 7:15 மணிக்கு ரயில் புறப்பட்டிருக்கிறது. இன்று காலை 6:45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து 6:50 மணிக்குப் புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வாலாந்தரவை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, சிவப்புக்கொடியுடன் ரயிலை நிறுத்துமாறு கத்தியபடி ஒருவர் ஓடிவருவதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியிருக்கிறார்.
பின்னர் ரயில் ஓட்டுநரும், பணியாளர்களும் இறங்கி வந்து பார்த்தபோது, கூச்சலிட்டு ரயிலை நிறுத்தியது வாலாந்தரவை ரயில்வே கேட் ஊழியர் வீரப்பெருமாள் எனத் தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, ``தண்டவாளத்தில் முக்கால் அடி அகலத்துக்கு விரிசல் இருக்கிறது. அதனால் ரயில் தடம்புரள வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் உடனடியாக ஓடிவந்து ரயிலை நிறுத்தினேன்" எனக் கூறியிருக்கிறார் வீரப்பெருமாள்.

சாதுர்யமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய வீரப்பெருமாளை ரயில் ஓட்டுநர், பணியாளர்கள், பயணிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். தகவலறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்துவந்து தண்டவாள விரிசலைச் சரிசெய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்டவாள விரிசல் காரணமாக ரயில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ரயில் தக்க நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பெருமாளிடம் பேசினோம். ``நான் வழக்கம்போல் காலை பணிக்குவந்து தண்டவாளத்தில் நடந்து சென்று கிளிப்புகள் கழன்றிருக்கின்றனவா, தண்டவாளத்தில் விரிசல் இருக்கிறதா என கவனித்து வந்தேன். அப்போது சுமார் எட்டு சென்டிமீட்டர் அகலத்தில் ஓர் இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்தேன். உடனடியாக ரயில்வே தண்டவாள பராமரிப்பாளர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். அப்போது அந்த வழியாக ராமேஸ்வரம் ரயில் வந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சில விநாடிகள் நின்றேன்.
பின்னர், சரி போனால் என்னுடைய ஒற்றை உயிர்தான் போகும், பலர் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிக்னல் காட்டுவதற்காக வைத்திருந்த சிவப்புக்கொடியை ஆட்டிக்கொண்டு தண்டவாளத்தின் நடுவில் சத்தமிட்டுக்கொண்டு ஓடினேன். ரயில் என்னை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது. இருந்தும் முன்னோக்கி ஓடினேன். ஓட்டுநர் என்னைப் பார்த்தவுடன் ரயிலை நிறுத்தினார். ரயில் விரிசலை மெதுவாகக் கடந்து நின்றது.

சுமார் 250 மீட்டர் வரை ஓடி ரயிலை நிறுத்தினேன். என்னை அனைவரும் பாராட்டிவருகின்றனர். என்னைப் பொறுத்தவரை பயணிகள் உயிரைக் காப்பாற்றியதை நினைத்து நிம்மதியடைந்திருக்கிறேன். தற்போது மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்துக்கு எனக்கு பாராட்டு தெரிவிக்க அழைத்திருக்கின்றனர்" என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம்தான் நவீன இயந்திரம் மூலம் வாலாந்தரவை தண்டவாளம் பாராமரிப்பு செய்யும் பணி நடைபெற்றதாகவும், அப்படியிருக்கும் நிலையில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.