Published:Updated:

பழநி: ஆன்மிக சுற்றுலா சென்ற இளைஞர்கள்; வரதமாநதியில் மூழ்கி பலி! - நடந்தது என்ன?

உயிரிழப்பு
News
உயிரிழப்பு

எதிர்பாராத விதமாக விக்னேஷ் பாறையில் இருந்து வழுக்கி நீருக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் யோகேஷ், கணேஷ் அடுத்தடுத்து நீருக்குள் விழுந்தனர்.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற ஹரிஷ் (23). இவர் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (23), யோகேஷ் (23), மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கணேஷ்(19) ஆகியோருடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலாபயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, பழநிக்கு டிசம்பர் 25-ம் தேதி வந்துள்ளனர். அங்கு நான்குபேரும் பழனி அருகே உள்ள வரதமாநதி அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விக்னேஷ், யோகேஷ், கணேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர். கரையில் நின்ற ஹரிஷ் அருகே இருந்தவர்களை அழைத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூன்று பேரின் உடல்களையும் சடலமாக மீட்டனர். ஆன்மிக சுற்றுலா வந்த இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பழநியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மீட்டனர்
மீட்டனர்

செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழப்பு எனச் செய்தி காட்டுத்தீயாய் பரவ, உண்மைத் தன்மை அறிய ஹரிஷிடம் பேசினோம். ``நான் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய பெரியம்மா மகன்கள் விக்னேஷ், யோகேஷ். இரட்டையர்களான இவர்களில் விக்னேஷ் கோயிலில் வேலை செய்து வருகிறார். யோகேஷ் பி.காம் முடித்துவிட்டு சி.ஏ படிக்கத் தயாராகி வந்தார். என்னுடைய தாய்மாமன் மகனான காரைக்காலைச் சேர்ந்த கணேஷ் பி.காம் முடித்துள்ளார்.

நாங்கள் நால்வரும் ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிட்டு முதலில் ரயில் மூலம் கோவை சென்றோம். அங்கு ஈசா மையம் மற்றும் மருதமலையில் தரிசனம் செய்துவிட்டு, டிசம்பர் 25-ம் தேதி பழநிக்கு வந்தோம். அன்றைய தினம் காலை ஆட்டோ மூலம் வரதமாநதி அணைக்கு சென்றோம். சிறிதுநேரம் அணை ஷட்டர் பகுதியில் இருந்து பார்த்துவிட்டு, நீர்பிடிப்பு பகுதிக்கு சென்றோம். அப்பகுதியில் செல்ல தடைவிதித்து எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. தடுப்பு வேலியும் அமைக்கபப்டவில்லை என்பதால் மதியம் 2 மணி அளவில் உள்ளே சென்றோம். அங்கு கரையை ஓட்டியுள்ள பாறையில் விக்னேஷ் ஏறி நின்று போட்டோ எடுக்கச் சொன்னான். அவனை யோகேஷ், கணேஷ் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். நான் 10 அடி இடைவெளியில் நின்று நீர்பிடிப்புப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக விக்னேஷ் பாறையில் இருந்து வழுக்கி நீருக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் யோகேஷ், கணேஷ் அடுத்தடுத்து நீருக்குள் விழுந்தனர். இதைப் பார்த்ததும் நான் அருகே கிடந்த குச்சியை எடுத்து அவர்களை மீட்க முயன்றேன். பிறகு அருகே நான் பயங்கரமாக கூச்சலிட்டதில் அருகே இருந்த சிலர் ஓடி வந்தனர். அவர்கள் மூலம் தீயணைப்புத்துறைக்கு போன் செய்தேன். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடினர். ஆனால் மூன்று பேரையும் சடலமாக தான் மீட்க முடிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

நடந்தது இவ்வாறாக இருக்க, ஊடகங்களில் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழப்பு எனத் தவறான செய்தி பரவியது. ஏற்கெனவே பெரும் துயரத்தில் இருக்கும் எங்களுக்கு அந்தச் செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்தது. எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதைப் பதிவு செய்வதற்காக இதைச் சொல்லவில்லை. நீர்பிடிப்பு பகுதி ஆபத்தானது என்பதை அறிவிக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டால் இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காது என்பதற்காகவே கூறுகிறேன்'' என்றார்.