Published:Updated:

நீலகிரி: ``நைட் 2 மணிக்குக்கூட வைத்தியம் பார்க்குறாரு!" - மக்கள் மனதை வென்ற இளம் மருத்துவர்

மருத்துவர் அருண் பிரசாத்
மருத்துவர் அருண் பிரசாத்

``நைட் 2 மணிக்குக்கூட நோயாளிங்கள பரிசல்ல கூட்டிட்டுப் போய் இவரே ஆம்புலன்ஸ்ல அனுப்பி வைப்பார். டாக்டர் ஜெயமோகன் இல்லாத குறைய இவர் போக்கிட்டு வர்றார். இந்த மாதிரி இக்கட்டான சூழல்ல இவர் மாதிரி ஒரு டாக்டர் இந்தக் கிராமத்துக்குக் கிடைச்சது பெரிய புண்ணியம்!"

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட நவீன வசதிகள் போதிய அளவில் இல்லாத மாயாற்றின் கரையில் அமைந்துள்ள கடைக்கோடி வன கிராமமாக உள்ளது தெங்குமரஹாடா. நீலகிரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட இந்தக் கிராமம் மூன்று மாவட்ட எல்லைகளைப் பகிர்வதோடு இரண்டு புலிகள் காப்பகத்துக்கு நடுவே அமைந்துள்ளது.

தெங்குமரஹாடா
தெங்குமரஹாடா

வேளாண்மையை பிரதானமாகக் கொண்டுள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினரும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சேவையாற்றும் தபால்காரர் முதல் மருத்துவர்கள்வரை மக்களின் அன்புக்கு பாத்திரமாவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த 29 வயதான மருத்துவர் ஜெயமோகன் இந்தக் கிராமத்து மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவையாற்றி மக்களின் மனதை வென்றிருந்தார். தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. அர்ப்பணிப்பு மிகுந்த இளம் மருத்துவரின் இழப்பை ஏற்க முடியாத மொத்த கிராமமும் கண்ணீரில் மூழ்கியது.

மருத்துவர் அருண் பிரசாத்
மருத்துவர் அருண் பிரசாத்

ஜெயமோகனின் இடத்தை நிரப்ப, அரசாங்கத்தால் தெங்குமரஹடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் மருத்துவர் அருண் பிரசாத். இந்த இளம் மருத்துவர் கடந்த ஓராண்டாகத் தனது அர்ப்பணிப்பு மிக்க மருத்துவ சேவையை இந்த எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார். இரவு, பகல் எதையும் பாராமல் பரிசலில் பயணித்து மக்கள் உயிரைக் காப்பாற்றிவரும் மருத்துவர் அருண் பிரசாத், தற்போதைய பெருந்தொற்று காலத்தில் அயராது சேவையாற்றி வருகிறார்.

தற்போது இந்தக் கிராமத்தில் 25 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர அறிகுறிகளுடன் இருந்தவர்களை இவரே மாயாற்றைக் கடக்க வைத்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள கோத்தகிரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரது இந்த சேவையை மருத்துவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மருத்துவர் அருண் பிரசாத்
மருத்துவர் அருண் பிரசாத்

மருத்துவர் அருண் பிரசாத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``எனக்குக் கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். நீலகிரியிலதான் என்னோட முதல் அப்பாயின்ட்மென்ட். சோலூர் மட்டத்துல ஒரு வருஷம் சர்வீஸ் பண்ணினேன். டாக்டர் ஜெயமோகன் இறந்ததும், இந்தக் கிராமத்துக்கு வந்தேன். இந்த ஊரும் மக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். கொரோனா முதல் அலையில 9 மாசம் இந்த ஊரை விட்டு நான் வேற எங்கயுமே வெளியவே போகல. இந்த வருஷமும் 2 மாசமா வெளியூருக்குப் போகாம இங்கேயே இருக்கேன்.

இந்த ஏரியால இப்போதான் கோவிட் பரவல் ஸ்டார்ட் ஆகியிருக்கு. அரசு உதவியோட உடனடியா தடுப்பு நடவடிக்கையில இறங்கிட்டோம்" என்றார் நம்பிக்கையுடன்.

இவரது சேவை குறித்துப் பகிர்ந்த தெங்குமரஹாடா அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ``எத்தனை மணிக்கு கூப்பிட்டாலும் முகம் சுளிக்காம உடனே வருவார். ஆள் இல்லைன்னாலும் யார் உதவியும் எதிர்பார்க்க மாட்டார். நைட் 2 மணிக்குக்கூட நோயாளிங்கள பரிசல்ல கூட்டிட்டுப் போய் இவரே ஆம்புலன்ஸ்ல அனுப்பி வைப்பார். ஜெயமோகன் இல்லாத குறையை இவர் போக்கிட்டு வர்றார். இந்த மாதிரி இக்கட்டான சூழல்ல இவர் மாதிரி ஒரு டாக்டர் இந்தக் கிராமத்துக்குக் கிடைச்சது பெரிய புண்ணியம். நாள்தோறும் மக்களுக்கு பரிசோதனை, கொரோனா விழிப்புணர்வுனு ஆக்டிவ்வா ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பார்.

தெங்குமரஹாடா
தெங்குமரஹாடா

இவருக்கு சப்போர்ட் பண்ணணும்னு நெனச்சா, இந்த ஊருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கிக் கொடுக்கலாம். ஏன்னா நோய் பாதிப்பு அதிகமா இருக்குறவங்கள மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போக 5 - 6 மணி நேரம் வரை ஆகுது. நீண்ட நாள் கோரிக்கையான, மாயாத்துல பாலம் கட்டிக் கொடுக்குற நடவடிக்கை எடுத்தா இன்னும் நல்லது" என்றார்.

மக்களின் மருத்துவருக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு