Published:Updated:

தலைவர் இல்லா தேனி ஆவின்; தடுமாற்றத்தில் `விற்பனை' - ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்!

உற்பத்தி அதே அளவு இருந்தாலும், நுகர்வோர் எண்ணிக்கை குறைந்தது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்ய திட்டமிட்டது ஆவின் நிர்வாகம்.

Theni Aavin Officials
Theni Aavin Officials

மதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் தனியாகப் பிரிக்கப்பட்டது தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம். தேனி என்.ஆர்.டி நகரில் வாடகை கட்டடத்தில் அலுவலகமும் ஆரம்பிக்கப்பட்டது. மதுரையுடன் இணைந்து இருக்கும்போது, அதிக அளவு பால் தேனியில் இருந்துதான் சென்றது. தேனி தனியாக பிரிக்கப்பட்டது, அதன் உற்பத்தி அதே அளவு இருந்தாலும், நுகர்வோர் எண்ணிக்கை குறைந்தது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்ய திட்டமிட்டது ஆவின் நிர்வாகம்.

Theni Aavin Officials
Theni Aavin Officials

தலைவர் இல்லா தேனி ஆவின்!

முன்னதாக மதுரையிலிருந்து பிரிக்கப்பட்ட தேனி ஆவினுக்கு தலைவராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா தேர்த்தெடுக்கப்பட்டார். தலைவர் தேர்ந்தெடுப்பில் முறையான விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவர் பதவியில் தொடர இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது தலைவர் இல்லா தேனி ஆவின், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

“ஆவினில் ஆட்டம் போடுகிறார் ஓ.ராஜா!”

மதுரையிலிருந்து பிரிக்கப்பட்ட தேனி ஆவின், தனியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உற்பத்தியில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், மக்களை ஆவின் பக்கம் திருப்ப திட்டமிட்டிருக்கும் அதிகாரிகள், முதல்கட்டமாக, தேனி மக்களிடம் கருத்து கேட்டனர். தேனி நகரின் வீதிகளில் இறங்கிய ஆவின் அதிகாரிகள், வீடுவீடாகச் சென்று ``நீங்க என்ன பால் வாங்குகிறீர்கள், ஏன்? என்ன காரணம்?'' என கேட்டு, அதைக் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும்படி, விண்ணப்பம் ஒன்றையும் கொடுத்தனர்.

Theni Aavin Officials
Theni Aavin Officials

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய தேனி ஆவின் பொதுமேலாளர் ராஜ்குமார், ``தேனி மாவட்டத்தில் 1 லட்சத்து 20,000 லிட்டர் பால் ஆவின் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. ஆனால், விற்பனை என்னவோ 5,400 லிட்டர் அளவிலேயே உள்ளது.

இதை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என அறிந்துகொள்வதற்கே மக்களிடம் கருத்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். பால் விற்பனைக்காக 105 முகவர்கள் உள்ளனர். கூடுதலாக 35 முகவர்களை நியமிக்க இருக்கிறோம். தேனியில் பால் விற்பனையை 50,000 லிட்டராக உயர்த்துவதே இலக்கு.

Vikatan

மக்களிடம் கேட்கும்போது, கடைகளுக்குச் சென்று ஆவின் பால் வாங்க வேண்டிய நிலை உள்ளது, அதனால், வீட்டுக்கு வந்து பால் ஊற்றுபவர்களிடம் வாங்கிக்கொள்கிறோம் என்றனர். ஆவின் பாலை வீட்டுக்கு கொடுக்கும் திட்டம் பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.