Published:Updated:

`தடுப்பூசி போட்டிருந்தால் கட்டணத்தில் தள்ளுபடி!' - விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேனி ஆட்டோ ஓட்டுநர்

ஓட்டுநர் கார்த்திக்
News
ஓட்டுநர் கார்த்திக்

``கொரோனா தொடங்கியபோது, என் நண்பரின் மனைவி நோய் குறித்த அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். அந்த நிமிடமே, கொரோனாவால் இனியொரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். என் ஆட்டோ மூலம் சேவை செய்ய முடிவு செய்தேன்." - ஓட்டுநர் கார்த்திக்

நாட்டையே உலுக்கிய கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் போராடியதை உலகமே அறியும். அந்த முன்களப்பணியாளர்களுக்கு தன்னாலான மரியாதையைச் செய்து வருகிறார் தேனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வீட்டை விட்டே வெளிவரமுடியாமல், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று ஒரு பக்கம் என்றால், நோய் குறித்த அச்சமும் மக்களை மிகவும் பாதித்தது. அவ்வாறு கொரோனா அச்சம் காரணமாக நண்பரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு, பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முகக்கவசம், கிருமிநாசினி வழங்குவது, கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு மக்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்வது போன்ற சேவைகளைச் செய்யத் தொடங்கினார். தற்போது ஒமிக்ரான் பரவல் தொடங்கியுள்ள நிலையில் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் கட்டணத்தில் இருந்து 10 சதவிதம் தள்ளுபடி கொடுத்து வருகிறார்.

ஓட்டுநர் கார்த்திக்
ஓட்டுநர் கார்த்திக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கொரோனா காலகட்டத்தில் அனைவரும் நிலைதடுமாறி போயிருந்த நிலையில் உங்களுக்கு எப்படி இந்த சமூக அக்கறை வந்தது?" என கார்த்தியிடம் கேட்டோம்.

``கொரோனா தொடங்கியபோது, என் நண்பரின் மனைவி நோய் குறித்த அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். அந்த நிமிடமே, கொரோனாவால் இனியொரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். என் ஆட்டோ மூலம் சேவை செய்ய முடிவு செய்தேன். என் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம், சானிட்டைசர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். ஆட்டோ முழுவதும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ஒட்டினேன். மேலும் கொரோனா பரவலைத் தடுக்கப் போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள், தூய்மையாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் என் ஆட்டோவில் பயணிக்க இலவசம் எனவும் எழுதி ஒட்டினேன்.

கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு முதியவர்கள் உள்ளிட்ட மக்களை இலவசமாக அழைத்துச் சென்று தடுப்பூசி போடவைத்து மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று விடுவேன். இவ்வாறு ஒரு முறை முகாம்களுக்கு மக்களை அழைத்துச் சென்றபோது அங்கு வந்திருந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் என் ஆட்டோவில் எழுதியிருந்த வாசகங்களை பார்த்துவிட்டு என்னை இருகரம் கூப்பி கும்பிட்டு சால்வை அணிவித்துப் பாராட்டினார். அந்தப் பாராட்டு மேலும் உத்வேகத்தை அளித்தது. அதேபோல என் ஆட்டோவில் பயணித்த முதியவர்கள் தவறவிட்ட 50,000 ரூபாயை அவரிடம் மீண்டும் ஒப்படைத்ததற்கு அப்போதையை தேனி டி.எஸ்.பி முத்துராஜ் பாராட்டினார்.

கார்த்திக்
கார்த்திக்

தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் மீண்டும் ஒமிக்ரான் பரவல் தொடங்கியுள்ளது. இருப்பினும் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான், என் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்தேன்'' என்றார்.

``உங்கள் வருமானத்திற்கு இதெல்லாம் கட்டுபடியாகுமா?" என்று கேட்டதற்கு, ``அட என்னங்க வருமானம்... சராசரியாக எனக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். தற்போது 500 ரூபாய்தான் கிடைக்கிறது. இருப்பினும் மனநிறைவோடு குடும்பத்தை நடத்துகிறேன். என் மனைவி ஜூஸ் கடைக்கு வேலைக்குச் செல்கிறார். என் ஆட்டோவுக்கு 10 மாத டியூ பாக்கி உள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக செலவு செய்ய என் மனைவியின் நகையை அடகு வைத்துவிட்டேன். உழைப்பு இருக்கிறது... சம்பாதித்து மீட்டுவிடுவேன்!" என்றார்.