Published:Updated:

`11 மாதக் குழந்தைக்கு பெங்களூரிலிருந்து வந்த உணவுப்பொருள்!’ - உதவிய தேனி மாவட்ட நிர்வாகம்

குழந்தையோடு ராஜ்குமார்
குழந்தையோடு ராஜ்குமார்

விநோத நோயால் அவதிப்பட்டுவந்த தேனியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தைக்குத் தேவையான பிரத்யேக உணவை பெங்களூரிலிருந்து வரவழைத்துக் கொடுத்திருக்கிறது தேனி மாவட்ட நிர்வாகம். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தேனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பிரியங்கா என்ற தன் உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்த ராஜ்குமாருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கு, பிறந்த சில நாள்களில் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளைக்குச் செல்லக்கூடிய நரம்பில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி மாத்திரை கொடுத்துள்ளனர்.

ராஜ்குமார் பிரியங்கா தம்பதியர்
ராஜ்குமார் பிரியங்கா தம்பதியர்

தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தையைப் பரிசோதித்ததில், Maple Syrup Urine Disease என்கிற பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு என பிரத்யேக புரோட்டின், வைட்டமின் நிறைந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். அந்த உணவுப் பொருள், பெங்களூரிலிருந்து ராஜ்குமார் வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.

`200 கோடி ரூபாய் வேண்டாம்; 50 கோடி கொடுங்கள்!' - ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கும் ஓ.பி.எஸ் மகன்

ஊரடங்கு காரணமாக, பெங்களூரிலிருந்து வர வேண்டிய உணவு தேனிக்கு வரவில்லை. இங்கிருந்து பெங்களூரு சென்று வாங்கலாம் என்றால், ஹோட்டலில் வேலை செய்யும் ராஜ்குமாரால், வாடகைக் கார் எடுத்து பெங்களூர் செல்ல பணம் இல்லை. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா உதவிக்கான தொலைபேசி எண்ணில் அழைத்துப் பேசிய ராஜ்குமார், தனது நிலையையும், தன் குழந்தையின் நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

பிரத்யேக உணவுப் பொருள்.
பிரத்யேக உணவுப் பொருள்.

உடனடியாக, ராஜ்குமாரை அழைத்த மாவட்ட நிர்வாகத்தினர், குழந்தையின் மருந்துவச் சான்றிதழ்கள், பெங்களூருவில் கிடைக்கும் உணவுப்பொருளின் விவரத்தைக் கேட்டறிந்துள்ளனர். பின்னர், ஒரு மாதத்துக்குத் தேவையான அந்த உணவுப்பொருளை பெங்களூரிலிருந்து வரவழைத்து, ராஜ்குமாரிடம் இலவசமாகக் கொடுத்துள்ளனர். அதற்கான செலவை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

டோலிவுட் ஃபேக்நியூஸ்... துல்கரின் அன்பு... பாரதிராஜாவின் தேனி பரபர! சோஷியல் மீடியா ரவுண்டப்

இது தொடர்பாக ராஜ்குமார் கூறும்போது, ``இதுநாள் வரை, ஆன்லைன் மூலமே அந்த உணவுப் பொருளை வாங்கி வந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக முன்னரே ஆர்டர் செய்தும் எனக்கு கிடைக்கவில்லை. ஹோட்டலில் வேலை செய்யும் என்னால், வாடகைக் கார் எடுத்து பெங்களூரு வரை சென்று வர முடியது. அதனால்தான் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடினேன். உடனடியாக எனக்கு உதவி செய்தனர். அவர்களின் உதவியை என்றைக்குமே மறக்க மாட்டேன்” என்றார் நெகிழ்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு