Published:Updated:

சபரிமலை பக்தர்களை சுற்றவிடும் தேனி?- மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக சீறும் மக்கள்

சபரிமலை செல்லும் சாலை மார்க்கமான வழித்தடத்தில் மாற்றம் தேவை என்ற குரல் சற்று பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயில் சீஸன் தொடங்க உள்ள நிலையில், தேனி மாவட்டம் வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள், ஆயிரக்கணக்கான வாகனங்களில் சபரிமலை நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். இந்நிலையில், சபரிமலை செல்லும் சாலை மார்க்கமான வழித்தடத்தில் மாற்றம் தேவை என்ற குரல் சற்று பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சபரிமலை
சபரிமலை

கடந்த மூன்று வருடத்துக்கு முன்னதாக சபரிமலை செல்ல வேண்டுமென்றால், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், குமுளி வழியாக சபரிமலை செல்லலாம். ஆனால், கடந்த மூன்று வருடமாகப் போக்குவரத்து நெரிசல் என்கிற காரணத்தைக் கூறி, சபரிமலை செல்ல தேனிக்குள் வரும் பக்தர்களின் வாகனங்களைக் கம்பத்தில் தடுத்து நிறுத்தி, கம்பம் மெட்டு, குட்டிக்கானம் வழியாக சபரிமலை செல்ல திருப்பிவிடப்பட்டன.

சபரிமலை தரிசனத்தை முடித்துவிட்டு குமுளி வழியாகத் திரும்பும் வகையில், குமுளிப் பாதையைத் திரும்புவதற்கான ஒருவழிப்பாதையாக மாற்றினர். புதிய பாதை என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு முதல் இரண்டு வருடங்கள் சற்று குழம்பம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் பக்தர்களிடமிருந்து சற்று எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலைக்குச் செல்ல பாரம்பர்யமாகப் பயன்படுத்தும் குமுளி பாதையில் சென்றுவிட்டு, திரும்புவதற்கு கம்பம் மெட்டுப் பாதையைப் பயன்படுத்தக் கூடாதா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதைக் கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டது தேனி மாவட்ட நிர்வாகம்.

சபரிமலை
சபரிமலை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி மாவட்டத்தலைவர் ராமராஜ், ``கம்பம் மெட்டுப் பாதையில் சென்றால், 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். மேலும், கம்பம் மெட்டுச் சாலையானது குறுகிய சாலை. அதே, குமுளிச் சாலை என்றால் 5 கொண்டை ஊசி வளைவுகள்தான். மேலும், தேசிய நெடுஞ்சாலை என்பதால் எளிமையாக செல்ல முடியும்.

தேவையான உணவு, மருத்துவ உதவிகள் கிடைக்கும். ஆனால், கம்பம் மெட்டு சாலையில் எதுவும் இல்லை. குமுளி வழியாகச் செல்வதைவிட 14 கிலோமீட்டர் அதிகம். போக்குவரத்து நெரிசல் என்று கூறி வழித்தடத்தை மாற்றுகிறீர்கள். நியாயம்தான். 48 நாள் விரதம் இருந்து ஐயப்பனை பார்க்க வரும் பக்தனை சுற்றவிடுவது எப்படி நியாயமாக இருக்கும்? காலம் காலமாகச் செல்லும் பாதையான குமுளி வழியாகக் கோயிலுக்குச் சென்றுவிட்டு வரும்போது கம்பம் மெட்டு வழியாக வரலாமே.

சபரிமலை
சபரிமலை

எங்களுடைய சர்வேபடி, தேனியைக் கடந்து சபரிமலை செல்லும் பக்தர்களில் 40% பேர் மீண்டும் தேனி வழியாகக் கீழிறங்குவதில்லை. சபரிமலை சென்றுவிட்டு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்றுவிட்டு பாலக்காடு - திருவனந்தபுரம் வழியாகத் தமிழகத்துக்குள் வருகிறார்கள். அப்படி இருக்கையில், சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பக்தர்களை 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கம்பம் மெட்டு வழியாக அனுப்பினால் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. அதைவிட்டுவிட்டு சாமி கும்பிட செல்பவர்களை சுற்றவிட்டு வேடிக்கை பார்ப்பதா?” என்று கொதித்தார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேனி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இருக்கும்போதுதான் சபரிமலை செல்லும் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பக்தர்கள், குமுளி வழியாக சபரிமலை சென்றுவிட்டு, கம்பம் மெட்டு வழியாகத் திரும்பட்டும் என்றுதான் திட்டமிட்டார். அவருடைய திட்டத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. 48 நாள் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், வழியில் எங்கும் எதுவும் வாங்க மாட்டார்கள். அதே, சாமி தரிசனத்குப் பிறகு வீட்டுக்கு செல்லும் வழியில் நிறைய பொருள்களை வாங்கிச் செல்வார்கள். இந்த சபரிமலை பக்தர்களால் உருவாகும் வர்த்தகம்தான் எஸ்.பி பாஸ்கரனின் எண்ணத்தில், சபரிமலை வழித்தடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பக்தர்களை தேவையில்லாமல் சுற்றவைப்பது நியாயம் இல்லை” என்று ஆதங்கப்பட்டார்.