கொரோனா: தேனியில் அதிகரிக்கும் பாசிட்டிவ் கேஸ்கள்!-திணறும் மாவட்ட நிர்வாகம்

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டது தேனியில்தான். சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பரிசோதனைகளில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் தேனிதான். ஆரம்ப சுகாதார நிலையத்தில் `கோவிட் கேர் சென்டர்’ அமைத்து, கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா சிகிச்சை கொடுக்க முடியும் என நிரூபித்தது தேனிதான்.

இப்படி, கொரோனா தொற்றினை அணுகுவதில் ஆரம்பத்திலிருந்து முன்மாதிரி மாவட்டமாகத் திகழும் தேனி மாவட்டம், அடுத்தடுத்து கொரோனா தொற்றின் அதிகரிப்பால், திணறிவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கொரோனா தொற்றுக்கு இரண்டு உயிர்கள் தேனியில் பறிபோய் உள்ளன. நேற்றைய நிலவரப்படி, தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200. அதில், 125 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினாலும், 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 28 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 2 மருத்துவர்கள், வருவாய் ஆய்வாளர், காவலர்கள், மற்றும் சிறைக்கைதி ஆகியோர் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில், அதிகபட்சமாக பெரியகுளத்தில் கடந்த 8 நாள்களில் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து வேறு வழி இல்லாமல், நேற்று மாலை முதல், பெரியகுளத்தில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அடுத்தபடியாக, கம்பம், போடி ஆகிய நகரங்களுக்கு முழு ஊரடங்கை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேனியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதைக் கவனிக்கும் கேரளாவின் இடுக்கி மாவட்டம், எல்லை தாண்டி கேரளாவிற்குள் வருபவர்களுக்கான விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. மிக அவசரம் எனும் நிலையில் மட்டுமே கேரளாவிற்குள் அனுமதிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக அத்தியாவசியப் பொருள்களை கேரளாவிற்குக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கின்றனர். மற்றபடி, வேறு காரணங்கள் கூறினால், இ-பாஸ் ரத்து செய்யப்படுகிறது. கடுமையான விசாரணை, கேரளாவில் செல்லும் இடத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்கான இட வசதிகள் என அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கின்றனர்.
தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்ன? கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்குக் குறைந்தது 250 முதல் 400 பரிசோதனைகளாவது நடக்கிறது” என்றார்.