Published:Updated:

`வருகைப்பதிவேட்டில் பிரசென்ட்.. பின்னர் திருத்தம்'- நீட் வழக்கில் டீனால் சிக்கிய பேராசிரியர்கள்?

தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதித் சூர்யாவுக்கு உதவியதாக இரண்டு பேராசிரியர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

உதித் சூர்யா
உதித் சூர்யா

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த அபிராமி அவரின் தந்தை மாதவன், பிரவீன் அவருடைய தந்தை சரவணன், ராகுல் அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோரைப் பிடித்து தீவிரமாக விசாரித்துவருகிறது சி.பி.சி.ஐ.டி. இந்த நிலையில், புதிய திருப்பமாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதித்சூர்யாவுக்கு உதவியதாக இரண்டு பேராசிரியர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

மாதவன்
மாதவன்

நேற்று, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர்களின் வருகைப்பதிவேடு நகல் வெளியானது. அதில் கடந்த 12-ம் தேதி உதித்சூர்யாவுக்கு பிரசென்ட் (P) பதிவிட்டுவிட்டு, அதை திருத்தி ஆப்சென்ட் (A) பதிவிட்டுள்ளனர். கல்லூரி முதல்வரின் தகவலின்படி 12-ம் தேதி முதல் உதித்சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அப்படி இருக்கையில், எப்படி பிரசென்ட் போட முடியும்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில், வருகைப் பதிவேட்டில் உதித்சூர்யாவின் வருகையில் குழப்பம் விளைவித்ததாகவும், உதித்சூர்யாவுக்கு உதவியதாகவும், கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவர் மீது, கானாவிலக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் டீன் ராஜேந்திரன்.

வழக்கு போலீஸாரின் கைகளில் இருந்து சி.பி.சி.ஐ.டி கைகளுக்கு மாறியுள்ள நிலையில், டீன் ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்து அந்தப் புகாரை கொடுத்திருக்கலாமே என்ற கேள்வியும், சரியான பாதையில் வழக்கு விசாரணை சென்று பலரும் சிக்கிக்கொண்டிருக்கும் சூழலில், வழக்கை திசைதிருப்பும் முற்சியாக கூட இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதேபோல் பேராசிரியர்கள் இருவருக்கும் டீன் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், அதையெல்லாம் விடுத்து அவர் போலீஸில் புகார் கொடுக்க என்ன காரணம் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

வருகைப்பதிவேடு
வருகைப்பதிவேடு

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் சூழலில், டீன் ராஜேந்திரனின் புகாரை, காவல்துறை ஏற்குமா என்பது சந்தேகமே... டீன் ராஜேந்திரனை அடுத்தடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், தன்னைக் காத்துக்கொள்ள இரு பேராசிரியர்கள் மீது பழிபோடுகிறார் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.