Published:Updated:

`தேனியில் வேகமாகப் பரவும் மர்மக் காய்ச்சல்!’ - அரசு மருத்துவமனை நிர்வாகம் சொல்வதென்ன?

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவும் காய்ச்சல் காரணமாக, பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் படையெடுத்து வருகின்றனர்.

Periyakulam GH
Periyakulam GH

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், அட்டனம்பட்டி, புல்லக்காபட்டி ஆகிய பகுதிகளில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Periyakulam GH
Periyakulam GH

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஒருவர், ``தேவதானப்பட்டியில் சுகாதார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குப்பைகளைக் கொட்டுவது, இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது என தொடர்ந்து அசுத்தம் செய்வதால், மக்களுக்கு காய்ச்சல் வருகிறது. பார்த்தால் மர்மக்காய்ச்சல் போல இருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் போதும், அவர் குடியிருக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் வந்துவிடுகிறது.

Devathanapatty
Devathanapatty

சிறியவர், பெரியவர் என யாரையும் விட்டுவைப்பதில்லை. இதனால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்கள். ஊரை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார் ஆதங்கத்தோடு.

Vikatan

இது தொடர்பாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் பேசியபோது, ``இது இந்த சீஸனுக்கு வரும் ஃப்ளூ காய்ச்சல்தான். இதைப் பெரிதாக நினைத்துப் பயப்பட வேண்டாம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிந்துரைத்தால், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரலாம். இங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Periyakulam GH
Periyakulam GH

சிலர் இதை டெங்கு காய்ச்சல் என்கின்றனரே என கேட்டபோது, ``இல்லை… கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தோம். இப்போதும் காய்ச்சல் என அனுமதிக்கப்படுவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து குணப்படுத்தி அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு தெரியாது என்பதால் மர்மக் காய்ச்சல் என்கின்றனர். தற்போது காய்ச்சலால் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சீஸனுக்கு வரும் ஃப்ளூ காய்ச்சல்தான்” என்றார்.