Published:Updated:

கொரோனா பரவல்: அடுத்தடுத்து மூடப்படும் தேனி காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்கள்

பூட்டப்பட்டுள்ள கலெக்டர் அறை
பூட்டப்பட்டுள்ள கலெக்டர் அறை

கடந்த சில நாள்களாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுவருகின்றன.

தேனி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. இதில், 153 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துவருகிறார்கள். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுவருகின்றன.

சின்னமனூர் காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
சின்னமனூர் காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

முன்னதாக, தேனி கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் இயங்கிய கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவே, கலெக்டர் அறை உட்பட கட்டடத்தின் முதல் தளம் முழுவதும் மூடப்பட்டது. அடுத்ததாக, சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, காவல்நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து, போடி தாலுகா அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் சிலர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போடி தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.

தேனி: `வங்கியில் எடுக்கப்பட்ட ரூ. 22 லட்சம்’ -தனியார் நிறுவன மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்

இந்த நிலையில், இன்று போடி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், போடி காவல்நிலையம் மூடப்பட்டது. அனைத்துக்கும் உச்சபட்சமாக, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் அலுவலகத்தில் பணியாற்றிய பணியாளர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், டீன் அலுவலகம் மூடப்பட்டது. தொற்றுடைய பணியாளரின் டிராவல் ஹிஸ்ட்ரி எடுக்கப்பட்டபோது, தேனியில் செயல்பட்டுவரும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அவர் வந்தது தெரியவரவே, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகமும் மூடப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பூட்டப்பட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
பூட்டப்பட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்

இது ஒருபுறம் என்றால், கொரோனா பரவல் காரணமாக, பெரியகுளத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதேபோல, தேனி மாவட்டத்தின் கம்பம், போடி ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கை செயல்பாட்டுக்கு கொண்டுவர தேனி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

``மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கொண்டுவர நிறையவே வாய்ப்பு உள்ளது. நாளை நடைபெறும் முதல்வர் தலைமையிலான கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், இது தொடர்பான முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது” என்றார் கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர்.

கொரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய மருத்துவருக்குத் தொற்று! - கலக்கத்தில் தேனி
அடுத்த கட்டுரைக்கு