Published:Updated:

ஒரு வாரத்திற்கு முன்பே வயிற்றில் இறந்த குழந்தை; தெரியாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கர்ப்பிணி!

தேனி அரசு மருத்துவமனை
தேனி அரசு மருத்துவமனை

தேனியில், வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது தெரியாமல், தாய் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சம்பவம், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கே.ஜி.பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரின் மனைவி இருதய ரோஷினி சில்வியா. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது போடி அருகேயுள்ள பத்ரகாளிபடம் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இருதய ரோஷினி சில்வியா, ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில், டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து வந்துள்ளார்.

கணவர் ஜெகனுடன் இருதய ரோஷினி சில்வியா
கணவர் ஜெகனுடன் இருதய ரோஷினி சில்வியா
`கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?' - விளக்கும் மருத்துவர்

அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதலாவது தவணை செலுத்திக் கொண்டார். பின்னர், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, தனியார் ஸ்கேன் சென்டருக்குச் சென்றார். அவருக்கு அங்கு ஆறாவது மாதத்திற்கான ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் குழந்தை எந்த ஓர் அசைவும் இல்லாமல் இருந்ததாகவும், குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் தகவல் கூறினர்.

இதனையடுத்து, ஸ்கேன் பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற இருதய ரோஷினி சில்வியாவை பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவ அதிகாரிகள், இருதய ரோஷினி சில்வியாவின் பரிசோதனை முடிவுகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை முடிவுகளைக் கொண்டு குழந்தை ஒரு வாரத்திற்கு முன்னரே உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

தேனி அரசு மருத்துவமனை
தேனி அரசு மருத்துவமனை

பின்னர் மருத்துவர்கள், தாயைக் காப்பாற்றுவதற்காக, அறுவை சிகிச்சையின்றி தீவிர சிகிச்சை அளித்து இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது இருதய ரோஷினி மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையின் டீன் பாலாஜிநாதன், ``குழந்தை இறப்பிற்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. குழந்தை ஒரு வாரத்திற்கு முன்னரே தாயின் வயிற்றில் உயிரிழந்திருந்த நிலையில் அதைப்பற்றி அறியாமல் அந்த கர்ப்பிணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வந்துள்ளார்.

டீன் - பாலாஜிநாதன்
டீன் - பாலாஜிநாதன்

அந்த அடிப்படையிலேயே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் குழந்தை இறந்தது எங்களுக்குத் தெரியவந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கும், குழந்தை இறந்ததற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. கர்ப்பிணி பெண்கள் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். தற்போது இருதய ரோஷினி நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்'' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு