தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 900-க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கும் தேனி மாவட்டத்தில், சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேனியில் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களால் தாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியகுளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தேவதானப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் குறிப்பிட்ட சிலர் கடந்த சில நாள்களாக அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
மது போதையில் இருந்த ஒரு மாணவன் அரசுப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவரைக் கண்டித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பள்ளிக்கு வந்த அந்த மாணவன் கத்தியைக் காட்டி ஆசிரியரை மிரட்டியதாகவும், மேலும் அந்த மாணவனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதே போன்று ஜி.கல்லுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்களை மாணவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். மேலும் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தேவாரம் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரிவாளைக் காட்டி ஆசிரியர்களை மாணவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கண்டித்தும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையீட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்ட தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து பள்ளிகளில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் முறையிட்டனர். பின்னர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``கொரோனா நோய்ப் பரவலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருந்த சமூகச் சூழலும், வெளியில் இருந்த சூழலும், தற்போது பள்ளி திறப்புக்குப் பிறகு கட்டுப்படுத்துவதால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஆசிரியர்களை அவமரியாதையாக நடத்துவதோடு சில இடங்களில் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அதுவும் குறிப்பிட்ட சில ஊர்களிலுள்ள அரசுப் பள்ளி, அங்குள்ள சில மாணவர்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
காரணமே இல்லாமல் ஆசியர்களைத் தாக்குவது மட்டுமல்லாமல் ஆயுதங்களைக் காட்டியும் அச்சுறுத்துகின்றனர். இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லவே ஆசிரியர்கள் அச்சம்கொள்கின்றனர். எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டுள்ளோம்" என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்த்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரிடம் மாணவர் ஒருவர், ``ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு... வாங்குவோம் பெயிலு" என ரைமிங்காகப் பேசியது மட்டுமல்லாமல், ``இதை வீடியோ எடுத்து என்ன செய்யப் போறே, என்னை ஒண்ணும் பண்ண முடியாது” எனத் தகாத முறையில் வசனம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ள நிலையில், இந்த வீடியோ வேகமாகப் பரவிவருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.