Published:Updated:

`5 கி.மீ சுற்றளவு; நான்கு ஆண்டுகள்!' - ஒற்றைக் காட்டு யானையால் அவதிப்படும் தேவாரம் மக்கள்

ஒற்றைக் காட்டு யானை கால் தடம்
ஒற்றைக் காட்டு யானை கால் தடம்

யானை பயத்தால், மாலை 5 மணிக்கு மேல், தங்களது தோட்டங்களுக்குச் செல்வதை தேவாரம் பகுதி மக்கள், முழுவதுமாக தவிர்த்துவிட்டனர்.

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஒற்றை காட்டு யானை. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த ஒற்றைக் காட்டுயானையால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரம்
காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரம்

இதனால், மாலை 5 மணிக்கு மேல், தங்களது தோட்டங்களுக்குச் செல்வதை தேவாரம் பகுதி மக்கள், முழுவதுமாக தவிர்த்து விட்டனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அதன் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`மார்ச் -4ல் தேர்தல்; களமிறங்கும் இருபிரிவுகள்!' - வேகமெடுக்கும் தேனி ஆவின் தலைவர் பதவி ரேஸ்

சமீபத்தில், தனது தோட்டத்துக்குச் சென்ற பெண் ஒருவரை, ஒற்றைக் காட்டு யானை தாக்க முயன்றுள்ளது. அதனால், பயந்து ஓடியவர், தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்பெண்ணுக்கு வனத்துறை சார்பில் எந்த உதவியும், நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும், ``யானையைப் பார்த்து ஓடியதற்கெல்லாம் நிவாரணமா?'' என வனத்துறை கிண்டல் செய்வதாகவும் தேவாரம் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்ட வன அலுவலர் கெளதம்
தேனி மாவட்ட வன அலுவலர் கெளதம்

மேலும், குறிப்பிட்ட 5 கிலோமீட்டர் பரப்பளவில் மட்டும் அதிகமான சேதத்தைக் காட்டு யானை ஏற்படுத்துவதாகவும், தினமும் யானையை விரட்ட, இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடுவதாக பொய்யான தகவலை வனத்துறை கூறிவருவதாகவும் தேவாரம் வாசிகள் கொதிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய தேனி மாவட்ட வன அலுவலர் கெளதம்,``யானையால் தாக்கப்பட்டு காயமடைந்தாலும், யானையால் பயந்து ஓடி காயம்பட்டாலும் ஒன்றுதான். அதனால், அப்பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. தேவாரம் மலை அடிவாரத்தில் உள்ள குறிப்பிட்ட 5 கிலோமீட்டர் பரப்பளவில், அகழி வெட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் அதைச் சரி செய்யும் பணி உள்ளது. மேலும், யானை வராமல் தடுக்கும் சூரை முள் செடியை நட்டிருக்கிறோம். மார்ச் கடைசியில் செடிகள் அனைத்தும் வளர்ந்துவிடும். சோலார் வேலி அமைக்கும் பணி ஒரு பக்கம் நடந்துவருகிறது. அதை முடிக்க 40 நாள்கள் ஆகும்.

`மதுபோதையில் அத்துமீறிய மகன்!' -தேனி படுகொலை விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இப்படி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற்காக நாளை கோம்பை ரேஞ்சர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கும் வனத்துறைக்குமான ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. அதில், யானை சம்பந்தமாக, வனத்துறையும் பொதுமக்களும் இணைந்து எப்படி செயல்படலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும்” என்றார்

அடுத்த கட்டுரைக்கு