Published:Updated:

`வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன்!' -துபாயில் தவித்த தேனி இளைஞர் ஊர் திரும்புகிறார்

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

துபாயில், மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்த தேனி இளைஞர் கணேஷ்குமார் பற்றிய செய்தி, இரு தினங்களுக்கு முன்னர், நம்முடைய விகடன் இணைய தளத்தில் வெளியானது. செய்தியின் விளைவாக, இளைஞருக்கு மருத்துவ உதவிகள் கிடைத்தன. இன்று ஊர் திரும்புகிறார்.

தேனி மாவட்டம் போடி பழைய பஸ்டாண்ட் அருகே வசிப்பவர் செல்வம். டெய்லர் கடை ஒன்றில், கூலிக்கு டெய்லர் வேலை பார்த்துவருகிறார். இவரின் ஒரே மகன் கணேஷ் குமார். கடந்த ஜனவரி மாதம், வேலை தேடி, ஏஜென்ட்கள் உதவியுடன், லட்சங்கள் செலவு செய்து துபாய் சென்றுள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக, வேலை ஏதும் கிடைக்காமல், நண்பர்கள் அறையில் தங்கியிருந்த கணேஷ்குமாருக்கு திடீரென மஞ்சள்காமாலை தாக்கியுள்ளது. ஏஜென்ட்களின் உதவியை நாட முயன்ற கணேஷ்குமாருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

`மஞ்சள் காமாலை…கேன்சர்?' - துபாயில் தவிக்கும் தேனி இளைஞர்; உதவி செய்வாரா ஓ.பி.எஸ்?
மருத்துவமனையில் கணேஷ்குமார்
மருத்துவமனையில் கணேஷ்குமார்

மருத்துவ உதவி கிடைக்காமல், அறையில் முடங்கினார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானது. 65 கிலோவில் இருந்த கணேஷ்குமார், ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைந்து ஒல்லியான உருவத்துக்கு வந்தார். உதவி கிடைக்க வேண்டி, தனது நிலையை வீடியோவாக எடுத்து வெளியிட, தேனி மக்களை கலங்கவைத்தது. இது தொடர்பாக விகடன் இணைய தளத்தில் செய்தி வெளியானது.

துபாயில் வசிக்கும் தமிழர்கள் பலர் கணேஷ்குமாரை தொடர்புகொண்டனர். குறிப்பாக துபாயில் உள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவரும் ஈமான் அமைப்பினர் கணேஷ்குமாரை உடனடியாக நேரில் சென்று சந்தத்தனர். அவர்கள் மூலமாக, ரைஸ் குழுமத்தின் சார்பில் கணேஷ்குமாருக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இன்று இரவே கொச்சி விமான நிலையம் வருகிறார் கணேஷ் குமார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தேனி வந்து விடுவார்.

`இளைஞர் தற்கொலையை அடுத்து நெஞ்சுவலி மரணம்' - அதிர்ச்சி கொடுக்கும் தேனி தனிமைப்படுத்தல் முகாம்
கணேஷ்குமார்
கணேஷ்குமார்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய கணேஷ்குமார், ``ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். வேலை தேடி வந்த இடத்தில் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன். இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் விகடன்தான். விகடன் செய்தியைப் பார்த்துதான் உங்களிடம் பேசுகிறோம்’னு நிறைய பேர் சொன்னாங்க எனக்கு எல்லா உதவிகளும் கிடைக்கவும் விகடன் செய்திதான் முக்கியக் காரணம். விகடனுக்கு ரொம்ப நன்றி. ரவீந்திரநாத்குமார் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வெளியுறவுத் துறையை தொடர்புகொண்டு விமானம் மூல நான் ஊர் திரும்ப உதவினர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார் நெகிழ்ச்சியோடு.

`பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..!' -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்
அடுத்த கட்டுரைக்கு