Published:Updated:

`மஞ்சள் காமாலை…கேன்சர்?' - துபாயில் தவிக்கும் தேனி இளைஞர்; உதவி செய்வாரா ஓ.பி.எஸ்?

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலை தேடிச் சென்ற இடத்தில், மஞ்சள்காமாலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்து மருத்துவ உதவிகூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார் தேனி இளைஞர் ஒருவர்.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கணேஷ்குமார். டிப்ளமோ படித்துவிட்டு, துபாயில் வேலை செய்ய வேண்டும் என கனவோடு, கடந்த ஜனவரி மாதம் துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் காரணமாக, வேலை ஏதும் கிடைக்காமல், நண்பர்கள் அறையில் தங்கியிருந்த கணேஷ்குமாருக்கு திடீரென மஞ்சள்காமாலை தாக்கியுள்ளது. இவரை அழைத்துச் சென்ற ஏஜென்ட்டும் தலைமறைவாக, மருத்துவ உதவி கிடைக்காமல், வீட்டில் படுத்தபடுக்கையானார் கணேஷ்குமார்.

இரண்டு மூன்று நாள்களில் நான் இறந்து கூட போகலாம். அப்படி இறந்துவிட்டால், என்னுடைய உடலையாவது எனது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுவிடுங்கள்.
கணேஷ்குமார்
கணேஷ்குமார்
கணேஷ்குமார்

65 கிலோவில் இருந்த அவர், ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைந்துள்ளார். மஞ்சள்காமாலையின் தாக்கம் குறையாமல் இருப்பது மட்டுமல்லாமல் கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாகவும், உடனே இந்தியா புறப்பட்டுச் சென்றுவிடுங்கள் என துபாய் மருத்துவர்கள் கூறியதாகவும் வீடியோவில் தெரிவிக்கிறார் அவர்.

பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கருப்பையில் பஞ்சு... அரசு மருத்துவர்களின் அலட்சியம்?! -தேனி அதிர்ச்சி

கணேஷ்குமார் உடன் வாட்ஸ்அப் காலில் பேசினோம். ``துபாயின் அல்குபைபா என்ற இடத்தில் இருக்கிறேன். மார்ச் மாதத்தில் இருந்து எனக்கு மஞ்சள்காமாலை இருக்கிறது. உடல் எடை வேகமாகக் குறைந்துவருகிறது. டூரிஸ்ட் விசாவில் வந்திருப்பதால், எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. ஒருவேளைக்கு ஒரு ஆப்பிள், இரவு ஒரு வாழைப்பழம் மட்டுமே சாப்பிடுகிறேன். வேறு ஏதாவது சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடுகிறேன். இதனால் எனக்கு உடலில் சக்தியே இல்லை. மூன்று நாளைக்கு ஒருமுறை அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றுகிறேன்.

கணேஷ்குமார் வெளியிட்ட வீடியோ
கணேஷ்குமார் வெளியிட்ட வீடியோ

ஒருமுறை குளுக்கோஸ் ஏற்றினால் இந்திய மதிப்புக்கு ரூ.4,000 கேட்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறையை தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தேன். ஆனால், எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் என்னுடைய நிலைமை மோசமாகிறது. எனக்கு மருத்துவ உதவி தேவை. இல்லையென்றால் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள். இரண்டு மூன்று நாள்களில் நான் இறந்துகூட போகலாம். அப்படி இறந்துவிட்டால், என்னுடைய உடலையாவது எனது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுவிடுங்கள்!” என்றார் தழுதழுத்த குரலில்.

`வேதிப்பூச்சு கொண்ட பழங்காலப் பானைகள்!’ - தேனி அருகே விவசாய நிலத்தில் ஆச்சர்யம்

இது தொடர்பாக கணேஷ்குமாரின் தந்தை செல்வத்திடம் பேசினோம். ``போடியில் உள்ள டெய்லர் கடையில் தினக் கூலிக்கு டெய்லர் வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். மகன் கணேஷ்குமார் துபாயில் இருக்கிறான். போனில் பேசும்போது, `உடல்நிலை சரியில்லை, மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், சரியாகிவிடும்’ என கூறினான்.

நாங்களும் தினமும் அவனிடம் பேசுவோம். மூன்று மாதத்துக்குப் பிறகு, நேற்று அவன் வெளியிட்ட வீடியோவில்தான் அவனைப் பார்த்தேன். இவ்வளவு மோசமான நிலையில் அவன் இருப்பான் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. தன்னுடைய நிலையைப் பற்றி, எங்களிடம் கூறக் கூடாது என அவனின் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான். நாங்கள் கஷ்டப்படுவோம் எனத் தெரிந்து, அவனது நிலையை எங்களிடம் மறைத்திருக்கிறான். இப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால், நான் அவனை துபாய் போக விட்டிருக்கமாட்டேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மகனை மீட்டுக்கொடுங்கள். இல்லையென்றால், அவனுக்கு மருத்துவ உதவி கிடைக்க ஏதாவது வழி ஏற்படுத்திக்கொடுங்கள்” என்றார் கண்ணீரோடு.

கணேஷ்குமாரின் தற்போதைய நிலை
கணேஷ்குமாரின் தற்போதைய நிலை

இதையடுத்து, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த இளைஞருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இந்த விவகாரத்தில் துணை முதல்வர் தலையிட்டு, அந்த இளைஞருக்கு உடனே மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

`பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..!' -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்
அடுத்த கட்டுரைக்கு