Published:Updated:

கரூர்: `காவல் நிலையத்துக்குள் நூலகம்!’ -அசத்தும் தென்னிலைப் போலீஸார்

நூலகம்
நூலகம் ( நா.ராஜமுருகன் )

'ஒரு நூலகம் திறக்கப்பட்டால், நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனை மனதில் வைத்துதான், எங்கள் காவல் நிலைத்தில் இந்த நூலகத்தை திறந்திருக்கிறோம்.

காவல்துறைக்கு அழியாத கறையை ஏற்படுத்தியிருக்கிறது, சாத்தான்குளம் காவல் நிலையச் சம்பவம். இந்த நிலையில், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தென்னிலை காவல் நிலையத்தில், அங்கு பணியாற்றும் போலீஸார் நூலகம் ஒன்றை அமைத்து, அசத்தியிருக்கிறார்கள்.

 நூலகத்தை திறந்து வைக்கும் கல்யாண்குமார்
நூலகத்தை திறந்து வைக்கும் கல்யாண்குமார்
நா.ராஜமுருகன்
`எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு தெரியல!' - கலங்கவைக்கும் குளித்தலை இளைஞர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது தென்னிலை. கரூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருக்கும் இந்தப் பகுதியில், காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், காவல் நிலையத்தை பார்த்து அச்சப்படுவதை தவிர்க்கவும், அவர்களிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்தால், குற்றங்களை குறைக்க முடியும் என்ற அடிப்படையிலும், காவல் நிலையத்தின் ஒரு பகுதியில், நூலகத்தை அமைத்திருக்கிறார்கள்.

தென்னிலை காவல் நிலையம்
தென்னிலை காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

தங்களது சம்பள பணத்தில் புத்தகங்களையும் வாங்கி, நூலகத்தை செம்மைப்படுத்தியிருக்கிறார்கள், இங்கு பணியாற்றிவரும் போலீஸார். தென்னிலை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட இந்த நூலகத்தை, அரவக்குறிச்சி டி.எஸ்.பி கல்யாண்குமார் திறந்துவைத்தார்.

`தாமதமானால் புத்தகம் படிக்கலாம்’

இது குறித்து, தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரனிடம் பேசினோம்.

"காவல் நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் பொருட்டும், 'காவல்துறை பொதுமக்களின் நண்பன்' என்பதை மக்களிடம் உணர்த்தும்வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை செய்யும்படி, எங்க மாவட்ட எஸ்.பி சார் அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக, பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரவே அஞ்சுகிறார்கள். காவல் நிலையத்துக்கு வர தவறு செய்பவர்கள்தான் பயப்பட வேண்டும்.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்
நா.ராஜமுருகன்

அதனால், காவல்துறையோடு பொதுமக்களுக்கு ஓர் இணக்கத்தை ஏற்படுத்த, நூலகம் அமைத்துள்ளோம். இங்கு பொதுமக்கள் புகார் கொடுக்க வரும்போது, அவர்களுக்கு இங்கு வேலை முடிய கூடுதல் நேரம் ஆகநேர்ந்தால், அந்த நேரத்தில் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம். இங்கு சட்டம், இலக்கியம், பொது அறிவு, தலைவர்களின் வரலாறு சம்பந்தப்பட்ட 50 புத்தகங்களை முதல்கட்டமாக வாங்கி வைத்திருக்கிறோம்.

கூடுதல் புத்தகங்களை வாங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறோம். கரூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில், எங்க முயற்சியை பாராட்டும் நோக்கில், புத்தகங்களை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் தர சமூகஆர்வலர்கள் யாரும் விருப்பப்பட்டால், தாராளமாகக் கொண்டுவந்து தரலாம்னு அறிவித்திருக்கிறோம். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லோருக்கும் வந்திவிட்டாலே, குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும்.

நூலகத்தை திறந்து வைக்கும் கல்யாண்குமார்
நூலகத்தை திறந்து வைக்கும் கல்யாண்குமார்
நா.ராஜமுருகன்

இதைதான், 'ஒரு நூலகம் திறக்கப்பட்டால், நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனை மனதில் வைத்துதான், எங்கள் காவல் நிலைத்தில் இந்த நூலகத்தை திறந்திருக்கிறோம். இந்த நூலகம், வருங்காலத்தில் தென்னிலைப் பகுதியில் ஏற்படும் குற்றங்களை வெகுவாகக் குறைத்து, குற்றங்கள் இல்லாத பகுதியாகத் தென்னிலையை மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார், உறுதியாக!.

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு