Published:Updated:

`எந்த அடிப்படை வசதியும் இல்ல!’ - வெள்ளம் வடிந்தும் வடியாத `தேன் வயல்’ சோகம்

பெரு மழை வெள்ளத்தில் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்ட பணியர் பழங்குடிகளின் வாழ்க்கையில் துயரம் நீங்காமல் இன்றளவும் வேதனையே நீடிக்கிறது.

Thenvayal tribal hamlet
Thenvayal tribal hamlet ( Arun.K )

ஈரம் கோத்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் வீடுகள். கழிப்பறைகள் இல்லை, சுகாதாரம் இல்லை , சிறிய மழையும் வீடுகளை மூழ்கடிக்கச் செய்யும் அபாயம் என மிக மோசமான நிலையில் கூடலூரில் பணியர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

Thenvayal tribal hamlet
Thenvayal tribal hamlet

100 ஆண்டுகளில் கண்டிராத பெருமழை கடந்த மாத துவக்கத்தில் நீலகிரி முழுக்கக் கொட்டித் தீர்த்தது இந்தப் பெரு மழைக்கு 7 பேர் பலியாகினர். சுமார் 5,000 பேர் மீட்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். தற்போது இயல்பு நிலை மெல்ல திரும்பி வீடுகளுக்கும் திரும்பிவிட்டனர். அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்னமும் போதிய உதவிகள் கிடைக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

`13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை; நாட்டிலேயே முதல் மாவட்டம்!’ - நீலகிரி ஆய்வாளர்கள் பெருமிதம்

கூடலூர் அருகில் உள்ள தேன் வயல் பணியர் கிராமத்தில் 16 வீடுகள் உள்ளன. 16 வீடுகளும் வெள்ளநீர் சூழப்பட்டு பொருள்கள் அனைத்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. உயிர் பிழைத்தால் போதும் என அனைவரும் ஊரைக் காலி செய்து முகாமில் தஞ்சம் புகுந்தனர். பல நாள்கள் முகாமில் தங்க வைக்கப்பட்ட பின்னர் வீடுகளுக்குத் திரும்பினர்.

Thenvayal tribal hamlet
Thenvayal tribal hamlet

மீண்டும் அதே மோசமான நிலையில் உள்ள வீடுகளில் கழிப்பறை கூட இல்லாமல் வாழ்ந்துவருகின்றனர். இந்த 16 குடும்பங்களுக்கும் கழிவறை இல்லாத நிலையில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. இதனால் பழங்குடி பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

` வெள்ள பாதிப்பைவிட அரசின் செயல் வேதனையளிக்கிறது!' - 1 லிட்டர் கெரசினால் கலங்கும் நீலகிரி மக்கள்

தாங்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து நம்மிடம் பகிரும் மாணிக்கம், ``கடந்த 2003-ம் ஆண்டு அரசு சார்பில் ரூ.40,000 மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்பட்டன. தேன் வயல் ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்ட எங்கள் வீடுகளுக்குள் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் சூழ்ந்து விடும். நாங்கள் இரவோடு இரவாகக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். கடந்த மாதம் பெய்த மழைக்குக்கூட எங்கள் பகுதிதான் முதலில் பாதித்தது. இதேபோல், கழிவறை கட்டித்தருகிறோம் எனச் சொல்லி பல ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வேண்டுகோள் விடுத்தும் அதற்கும் எந்தப் பயனும் இல்லை. மிக மோசமான நிலையில் ஆபத்துடன் வாழ்ந்துவருகிறோம்’’ என்றார்.

Manikkam
Manikkam

இதுகுறித்து கூடலூர் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு விரைவில் மாற்று இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்" என்கின்றனர்.

கூடலூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின செயல்பாட்டாளர் ஷோபா கூறுகையில், ``மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அவசியமான ஒன்றாக உள்ளது. பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். இவர்களுக்கு வீடு ஒன்றே அவசியத் தேவையாக உள்ளது. எனவே, இந்த மக்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.