Published:Updated:

`தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி’ - அதிக கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில், வட தமிழகக் கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் பரவலாகக் கன மழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில், குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் பரவலாகக் கன மழையும் ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்றும் அதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

ஏற்கெனவே, அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் கடல் சீற்றம் இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.