தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும், நாளை 18-ம் தேதி தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.
