Published:Updated:

`எந்த விசாரணை அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்!

``தற்போதைய சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா பாபு பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடியிலிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தியும் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த பேரணியின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் இயக்கத்தினர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

இதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இங்கு வந்து ஆய்வு நடத்தி அறிக்கைகள் பெற்றது. பின்னர், இந்த வழக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக முடித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை மீறல் காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் `மக்கள் புலன் விசாரணை' என்ற பெயரில் ஆய்வறிக்கைகள் தயாரித்து சென்னையில் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியிலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தோம்.

ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் மற்றும் மனித உரிமை மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணைய நீதிபதியும் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதி தெரிவித்துள்ளனர். தற்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்டம் நடத்தவோ, கருத்துகளை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம்
துப்பாக்கிச்சூடு சம்பவம்

இது அரசியல் அமைப்புச் சட்டம் 9-வது அட்டவணையை மீறுவதாகவே உள்ளது. தற்போதுள்ள சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது” என்றார்.