Published:Updated:

ஸ்ரீரங்கம் கோயில்: `330 ஏக்கர் இருந்தது, இப்போ 24 ஏக்கர் மட்டுமே இருக்கிறது!' - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

``கோயில் இடத்தில் குடியிருப்புகளும் கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளன. அவற்றில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.” - அமைச்சர் சேகர் பாபு

``ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமாக 330 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் என்ன ஆகின, எப்படி ஆக்கிரமிக்கவிட்டார்கள் என்கிற விவரம் இன்று வரையிலும் தெரியவில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் கோயில் நிலங்களை அபகரிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் நாங்கள் விடப் போவதில்லை" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று காலை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுவாமி தரிசனம் செய்து அவருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். பின்னர், கோசாலையையும் அதன் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்ட பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர். ``தமிழகம் முழுவதிலும் திருக்கோயில்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்கிறரீதியில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு செய்யாத கோயில்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கோசாலையைச் சிறப்பாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் அருகே உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு மேலும் கோசாலையை ஏற்படுத்தி, பராமரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தியிருக்கிறேன்.

அமைச்சர்
அமைச்சர்

கடந்த ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்த கோயில் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று 110 விதியின் கீழ் அறிவித்துவிட்டு, செயல்படுத்தப்படாமல் விட்டுச் சென்றுவிட்டனர். அந்த அறிவிப்பை தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தவிருக்கிறோம். முதற்கட்டமாக காலியாக இருக்கும் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள். இது உறுதி" என்றார்.

`ஹெச்.ராஜா, கோயில் நில ஆக்கிரமிப்பு விவரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்போம்!' - அமைச்சர் சேகர் பாபு

தொடர்ந்து, ``ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமாக 330 ஏக்கர் நிலங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், தற்போது வெறும் 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் என்ன ஆகின, எப்படி அபகரித்தார்கள் என்கிற விவரம் பெரிதாகத் தெரியவில்லை என்கிறார்கள்.

அதிகாரிகளுடன் ஆய்வு
அதிகாரிகளுடன் ஆய்வு

கோயில் இடத்தில் குடியிருப்புகளும் கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளன. அவற்றில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கோயில் சொத்துகளை அபகரிக்க நினைப்பவர்களை நாங்கள் விடப் போவதில்லை" என்றார் காட்டமாக!

அடுத்த கட்டுரைக்கு