Published:Updated:

ரத்ததானம், அன்னதானம், பசுமைதானம்... மதுரைக்கு உரமாக இருக்கும் தன்னார்வக் குழு!

வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டாலும், தற்போது மூன்று குழுவினர்களும் கைகோத்து நிற்கின்றனர்.

குழுவினர்
குழுவினர்

கொடையாளர்களை ஒன்றிணைத்து மதுரை மருத்துவமனைகளுக்கு உதவி வருகிறது, ‘BOOM’ மதுரை குருதிக்கொடையாளர் குழு, BOOM - Madurai Blood Donors Club! முகநூல் கணக்கில் கிட்டத்தட்ட 60,000 பேரை இணைத்து இயங்கி வருகிறது, இந்தக்குழு!

தன்னார்வ அமைப்பொன்றிலிருந்த நண்பர்கள் சிலர் இணைந்து 2011 ஜனவரி 18-ல் குழு தொடங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் 12 பேர், நிர்வாகி 38 வயது ஷர்மிளா, குருதித் தேவைக்காக்க உதவிட எந்நேரமும் காத்திருக்கின்றனர். நண்பர்களான ‘நிழல் நண்பர்கள்’ குழுவும், ‘பசியாற்று’ குழுவும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டாலும் தற்போது மூன்று குழுவினர்களும் கைகோத்து நிற்கின்றனர்.

'பூம்' குருதிக் கொடையாளர் குழு.
'பூம்' குருதிக் கொடையாளர் குழு.

கோஆர்டினேட்டர்ஸ் `நிழல் நண்பர்கள்’ கார்த்திக்கும், `பசியாற்று’ ராம்குமாரும் குழுச்செயல்பாடுகளை விளக்கினர். ஞாயிற்றுக்கிழமையை குழுவுக்கு ஒதுக்குகின்றனர். ‘நிழல் நண்பர்கள்’ சாலைகளோரம் மரக்கன்று நடுவது, 70 பேர்கொண்ட ‘பசியாற்று’ குழுவினர் நகரின் பல்வேறு இல்லங்களில், வீதிகளிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவளிப்பது போன்ற பணிகளைச் செய்கின்றனர்.

ஒரு குழுவினர் அடுத்த குழுவின் பணியையும் சேர்த்தே செய்கின்றனர். யாரிடமும் வசூலிக்காமல், சொந்தப்பணத்தைச் செலவிடுகின்றனர். கஜா புயல், கேரளப் பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் பெருந்திரளாக நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஏழைப்பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது, ஆதவரற்றோர் வேண்டுகிற பொருள்கள் வாங்கித்தருவது எனப் பல்வேறு சேவைகளில் ஈடுபடுகிற இவர்களின் முதன்மைப்பணி, ரத்ததானம்!

Vikatan

உரியநேரத்தில் குருதிக்கொடை, எப்படிச் சாத்தியம் இவர்களுக்கு? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு குழு. அதன்கீழ் தனித்தனிக் குழுக்கள். ஈடுபாட்டோடு தொடர்ந்து செயலாற்றுவோருக்குத் தனிக்குழு என வகைபிரித்து வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்துள்ளனர். குழு நிர்வாகியோடு அரசு, தனியார் மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் தனிக்குழுவில் இணைந்துள்ளனர். இவர்கள் நிர்வாகிக்குத் தருகிற தகவலுக்கேற்ப நிமிடங்களில் உடனடி உதவி போய்ச்சேருகிறது.

'பசியாற்று' குழு
'பசியாற்று' குழு

குழுவினர்கள் தங்களுக்குள் சுயக்கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். ஈகோவுக்கு இங்கே இடமில்லை. மதுரையின் மருத்துவ அவசரம் தவிர, வேறேதும் குழுவில் பகிரக் கூடாது. எக்காரணம் கொண்டும் தன்னார்வலர்கள் நள்ளிரவு வாகனம் ஓட்டக் கூடாது. தேவைப்படும் மருத்துவமனை தங்கள் வாகனத்தில் அவர்களை அழைத்துக்கொள்ளும். இந்தக் குழுவில் சேர விரும்புவோர் அட்மின்கள் கலந்தாய்வுக்குப் பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவர். இரண்டாவதுமுறை கட்டுப்பாடு மீறுகிற எவரும் குழுவிலும் குழு நடவடிக்கைகளிலும் இருந்து அதிரடியாய் நீக்கப்படுவர்! இந்தக்கட்டுப்பாடே, குழுக்கள் இத்தனை காலம் வெற்றிகரமாய் நீடிக்கக் காரணம் என்கின்றனர். மாணவர்கள், இளைஞர்கள், பணிசெய்வோர் எனப் பலதரப்பட்டவர்களும் குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஒருங்கிணைப்பில் பெரும்பங்கு, குழு நிர்வாகி ஷர்மிளாவுக்கு.

சுயக்கட்டுப்பாடுகள்தான், குழு இத்தனை காலம் வெற்றிகரமாக நீடிக்கக் காரணம்.

எம்.ஏ, பி.எட் முடித்த ஷர்மிளா, தனியார் பள்ளி ஆசிரியை. பெற்றோர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கும் இவருக்குக் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

“முதல்ல வருத்தப்பட்டாங்க. அப்புறம் என் செயல்பாடுகள் அவங்களுக்குப் புரிதலைக் கொடுத்திருக்கு. வாழ்க்கையில நிறைய அடிகள். ஆனா, நான் பண்ற இந்தச் சேவை எல்லா வலிகளையும் மறக்கடிச்சிடுது” எனப் பெருமிதத்தோடு சிரிக்கிறார் ஷர்மிளா.

சென்னை தலைமைக்காவல் உயரதிகாரிகள் பரிந்துரைப்படி காவலர்களுக்கு மனநல கவுன்சலிங் வகுப்புகள் நடத்தி வருகிறார். நிறைய சமூகப் பணிகள் செய்தாலும், 'பூம்' குழுவின் செயல்பாடுகளுக்கே முன்னுரிமை தருகிறார்.

'நிழல் நண்பர்கள்' குழு
'நிழல் நண்பர்கள்' குழு
ரத்த தான முறைகளை மேம்படுத்தவும் ரத்தத்தேவைகளுக்கு உடனடித்தீர்வு காணவும் பல மாநில நண்பர்களோடு முகநூலில் இணைந்து ஆலோசிக்கிறேன்.
ஷர்மிளா

கேன்சர், டெங்கு போன்றவையே ரத்தத்தேவையின் சவால்கள்! தினசரி அதிக ரத்தம் தேவை. அனுபவம் பகிர்ந்தார் ஷர்மிளா.

“கேன்சர் பாதித்த ராணுவ வீரர் மதுரை மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். அவரின் மனைவி, தன் கணவருக்கு ரத்தம் தர வந்த இளைஞரைக் கூப்பிட்டு கைகூப்பி அழுதார். ‘என்னங்கம்மா’ன்னு கேட்டேன். ‘ரொம்பக் கஷ்டப்படுறார். பார்க்கவே முடியலை. ஆனா இவரோட நிலை தெரிஞ்சும், காதலிச்ச பையன்கூட வெளிநாடு போயிட்டா, எங்க மக. இவர் அனுபவிக்கிற வலியைவிட, மகள் போன வலிதான் தாங்கலை, எங்களுக்கு!’ன்னு சொல்லிக் கதறினார்.

எனக்கு அழுகை நெஞ்சடைச்சது. சிகிச்சை முடிச்சு கிளம்பின நாள் வரைக்கும் அவங்களைக் கவனிச்சுக்கிட்டோம்” என கலங்கினார்.

ரத்த தான முறைகளை மேம்படுத்தவும் ரத்தத்தேவைகளுக்கு உடனடித்தீர்வு காணவும் பல மாநில நண்பர்களோடு முகநூலில் இணைந்து ஆலோசிக்கிறார் ஷர்மிளா.

Vikatan

ரத்தசேமிப்புக்கென வழிமுறை உள்ளது. வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என நான்காகப் பிரித்துதான் வைப்பார்கள். தட்டணுக்கள்தான் ரத்தத்தை உறைய வைப்பது. இந்த பிளேட்லெட்சை மட்டும் தானமாகப் பெறுகிற மருத்துவமுறை தற்போது வந்துள்ளது. இதனால், மொத்தமாக ரத்தம் தேவைப்படுவதைத் தவிர்க்க முடியும். இப்படி பிளேட்லெட்ஸ் தானம் வழங்கும் 'சிங்கிள் டோனர்கள்' மட்டுமே இவர்களின் குழுவில் 40 பேர் இருக்கிறார்கள்.

பிளேட்லெட்ஸ் கொடையாளரின் ரத்த மாதிரியைச் சோதித்து எண்ணிக்கை கணக்கிடுவர். குறைந்தபட்சம் மூன்று லட்சம் பிளேட்லெட்ஸ் இருந்தால்தான் தானம்செய்யலாம். கேன்சர், டெங்கு நோயாளிகளுக்கு தினசரி ஒரு லட்சம் பிளேட்லெட்ஸ் தேவை. நம்மிடமும் அந்த எண்ணிக்கைக்குள்தான் எடுப்பார்கள். வழக்கமான ரத்ததான முறைதான். ஆனால், பிளேட்லெட்ஸ் பிரித்தவுடன், ரத்தத்தை மீண்டும் நம் உடலில் செலுத்திடுவர். இந்த நடைமுறைக்கு சுமார் மூன்று மணிநேரம் ஆகும். இதற்கான இயந்திரம் மதுரை மீனாட்சி மிஷன் மற்றும் வேலம்மாள் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது.

Vikatan
பிளேட்லெட்ஸை மட்டும் தானம்பெறும் மருத்துவமுறை வந்துள்ளது. இதனால், மொத்தமாக ரத்தம் தேவைப்படுவதைத் தவிர்க்கலாம். பிளேட்லெட்ஸ் தானம் தரும் 'சிங்கிள் டோனர்கள்' மட்டுமே குழுவில் 40 பேர் இருக்கிறார்கள்.
ஷர்மிளா
பிளேட்லெட்ஸ் கொடையாளரும், அதற்கான பிரத்யேக இயந்திரமும்
பிளேட்லெட்ஸ் கொடையாளரும், அதற்கான பிரத்யேக இயந்திரமும்

ஒருமுறை பிளேட்லெட்ஸை நோயாளி உடலில் ஏற்ற 10,000 ரூபாயாகும். இயந்திரத்தின் விலை 30 லட்சம். உடலின் பிளேட்லெட்ஸ் ஆயுள்காலம் 7 - 10 நாள்கள் மட்டுமே. எனவே, 10 நாள்களுக்குள் மீண்டும் ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் உற்பத்தியாகிவிடும். இதுகுறித்து அறிந்தவர்களும் அதிகநேரம் செலவாகும், உடலில் பிரச்னைகள் வரும் என்ற வீண் பயத்தால் தானத்துக்கு முன்வருவதில்லை.

ஆனால், அச்சமோ குழப்பமோ தயக்கமோ தேவையே இல்லை என்கின்றனர், ஷர்மிளாவும், மருத்துவர்களும். இந்த 'சிங்கிள் டோனர்' விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறார் ஷர்மிளா.

சண்டேதான் ஃப்ரீ. ரெஸ்ட்டைவிட இந்தப் பணியிலதான் எனக்கு நிம்மதி, மனசும் லேசாகுது.
மீனா, குழுத் தன்னார்வலர்

‘நிழல் நண்பர்கள்’ கார்த்திக் பேசியபோது, “325 மரங்கள், 500 பனைவிதைகள் நட்டிருக்கோம். 6,500 விதைப்பந்துகள் தூவியிருக்கோம். பசுமைக்காக இன்னும் நிறைய செய்வோம்” என்றார். மூன்று குழுக்களிலும் செயல்பட்டுவரும் மீனாவிடம் பேசினோம். “தொடர்ந்து ரத்தம் கொடுக்கிறேன். ரத்தத்தேவைக்கு உதவி பண்றேன். ஞாயிறு காலை 6 மணிக்கு ‘நிழல்களு’க்காக மரம் நடுறதுக்குப் போயிடுவேன். அடுத்து, காலை 9 மணி, ‘பசியாற்று’க்கு வந்து ஆட்களுக்குச் சாப்பாடு தர்ற பணி செய்வேன். தனியார் கம்பெனி வேலை. சண்டேதான் ஃப்ரீ. ரெஸ்ட்டைவிட இந்தப்பணியிலதான் எனக்கு நிம்மதி, மனசும் லேசாகுது” என்றார்.

முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய குழுவினர்
முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய குழுவினர்

பேசிக்கொண்டிருந்தபோதே ஷர்மிளாவின் வாட்ஸ்அப்க்குச் செய்தி வந்தது, ‘இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்ததில் இருந்து கடந்த 5 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த தாய், தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். தொடர்ச்சியாக ரத்தம் கிடைக்கச் செய்த நமது குழுவினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி’ எனக் குழுவினர் அனைவரும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றனர்.

மகிழ்ச்சி பரவிய முகத்தோடு ஷர்மிளா சொன்னார், ‘வேறென்னங்க வேணும், இந்த சந்தோஷம் போதுமே எங்களுக்கு. வாழ்க்கை அர்த்தப்படுது!’ என்றார்.

மதுரையில் உதிரத் தேவைக்கும் அவசர உதவிகளுக்கும் இந்தக் குழுவினரைத் தொடர்புகொள்ளலாம்: 7448376060.